கோப்புப்படம் 
வணிகம்

ஜூலையை விடக் குறைவு: ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ரூ.86,449 கோடியாகச் சரிவு

பிடிஐ

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.86 ஆயிரத்து 449 கோடியாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் வரி வசூல் குறைந்துள்ளது. ஜூலையில் ரூ.87 ஆயிரத்து 422 கோடி வசூலான நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.86,449 கோடிதான் வசூலானது.

கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரியில் 88 சதவீதம்தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வசூலாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.98 ஆயிரத்து 202 கோடி வசூலானது.

2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.86 ஆயிரத்து 449 கோடியாக இருக்கிறது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.15 ஆயிரத்து 906 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி வரி ரூ.21,064 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.42,264 கோடியாகவும் இருக்கிறது.

இதில் செஸ் ரூ.7,215 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய ஜிஎஸ்டி ரூ.18,216 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரி 14,650 கோடியும் தீர்க்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி வருவாயில் இழப்பீட்டை ஈடு செய்ய, மாநிலங்கள் ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆலோசனைக்கு 7 மாநிலங்களும், ஒரு யூனியன் பிரதேசமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் வரிவருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT