வணிகம்

பார்மா துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய வாய்ப்பு: மத்திய அரசு செயலாளர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

மருந்து தயாரிப்பு துறையில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசின் மருந்தியல் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு "மருந்து பொருட்கள் மற்றும் உயிரி தொழில் நுட்பத்துறையில் முதலீட்டு வாய்ப்புகள்" என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.

இதில், மத்திய அரசின் மருந்தியல் துறையின் செயலாளர் வி.கே.சுப்புராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;

நாம் சுதந்திரம் அடைந்தபோது மருந்து உற்பத்தியில் ஜீரோ நிலையில் இருந்தோம். ஆனால், இன்றைய தினம் ஹீரோ ஆகியிருக்கிறோம். நம்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. உலக அளவில் 38 விதமான தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இந்தியாவில், 6 அல்லது 7 வகையான தடுப்பு மருந்துகள்தான் தயாரிக்கப்படு கின்றன.

மருந்துத் தயாரிப்பு துறையில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. அதில் ரூ.1 லட்சம் கோடி உள்நாட்டுக்கும் எஞ்சிய ரூ.1 லட்சம் கோடி வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. தற்போது மருந்தியல் துறையில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் வாய்ப் புள்ளது.

இதர துறைகளில் 7 சதவீதத்துக்கும் குறைவான நிலையிலேயே வளர்ச்சி இருந்து வருகிறது. அதேநேரத்தில், மருந்து தயாரிப்பு துறையில் 15 சதவீதம் வளர்ச்சி இருக்கிறது.

மருந்துகளுக்கான மூலப் பொருட்களை 80 சதவீதம் சீனாவில் இருந்துதான் நாம் இறக்குமதி செய்கிறோம். அந்த நாடு மருந்து மூலப் பொருட்களை தரமறுக்கும் நிலை ஏற்படலாம். எனவே, மருந்து மூலப்பொருட்களை நம் நாட்டில் தயாரிக்கும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

திருவள்ளூரில் மருத்துவ பூங்கா அமைக்க 850 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தேர்வுசெய்து அளித்துள்ளது. இந்த பகுதியில் மருத்துவ பூங்கா அமைக்கப்பட்டால் தமிழகம் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் முன்னேற்றம் அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT