இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜூன்30-ம் தேதியுடன் நிறைவடைந்தகாலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.4,40,609 கோடி மொத்த வர்த்தகம் செய்துள்ளது. இது கடந்தஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.4,37,269 கோடியாக இருந்தது.
மொத்த வைப்பு கடந்த ஆண்டு ஜூனில் ரூ.2,21,171 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.2,25,546 ஆக உயர்ந்துள்ளது. முதலீடுகள் மீதான வட்டி அதிகரிப்பு மற்றும் வட்டி செலவினங்கள் குறைப்பால், கடந்த ஆண்டு ரூ.825.15 கோடியாக இருந்த செயல்பாட்டு லாபம் தற்போது உயர்ந்து ரூ.1,094 கோடியாக உள்ளது.
வங்கியின் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ரூ.92,514 கோடி (41.02%) ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுஇதே காலகட்டத்தில் ரூ.84,145 கோடி (38.05%) ஆக இருந்தது. கடந்த ஆண்டு நிகர நஷ்டம் ரூ.342.08 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.121 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
மொத்த வருவாய் கடந்தஆண்டில் ரூ.5,006.48 கோடியாகஇருந்தது. இது தற்போதுரூ.5,234 கோடியாக உயர்ந்துள்ளது. முக்கியமாக கருவூல வருமானம் அதிகரிப்பின் காரணமாக இது சாத்தியானது. அதேபோல வட்டி செலவு குறைந்ததால் வங்கியின் மொத்த செலவினம் ரூ.4,178.32 கோடியிலிருந்துரூ.4,139 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.