வணிகம்

முதலீடுகளை துணிந்து உயர்த்துங்கள்: தொழில் துறையினரிடம் மோடி வலியுறுத்தல்

பிடிஐ

தொழில் துறையினர் துணிந்து தங்களது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

சீனாவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை, சர்வதேச மந்த நிலையால் இந்தியாவுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை ஆராய தொழில் துறையினருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத் தினார்.

அப்போது பேசிய மோடி, பொதுவாக வளரும் பொருளாதார நாடுகளில் கூட தேக்க நிலை நிலவுகிறது. ஆனால் இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது. இந்தியாவில் மட்டும்தான் 7 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. எனவே இத்தகைய சாதகமான சூழலை அதாவது பிற நாடுகளில் தேக்க நிலை நிலவினாலும் அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

நமது பொருளாதார நிலை ஆதாரம் மிகவும் வலுவானது. சமீபத்தில் சீனாவில் நிகழ்ந்த சரிவு நம்மை பாதிக்கவில்லை என்பதிலிருந்தே நமது பொருளாதார வலிமையை உணரலாம். இத்தகைய சூழலை தொழில்துறையினர் சாதக மாக்க துணிகரமான சில முடிவுகளை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களை இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் சுமித் மஜும்தார் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். ஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய 3 மணி நேரம் நடைபெற்றது.

ஒவ்வொரு துறையைச் சேர்ந்த தொழில் துறையினர் தெரிவிக்கும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் ஜேட்லியும் கேட்டுக் கொண்டதாக யெஸ் வங்கி தலைமைச் செயல் அதிகாரி ராணா கபூர் குறிப்பிட்டார். தொழில் துறையினர் பெரும்பாலும் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பிரதமரின் வலியுறுத்தல் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை என்று தொழில்துறையினர் தெரிவித் துள்ளனர்.

இருப்பினும் சீனாவிலிருந்து வெளியேறும் முதலீட்டாளர்களை இந்தியா ஈர்க்க முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், பியுஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் தவிர ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம், நிதி ஆயோக் உறுப்பினர் பிபக் தேப்ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழில் துறை சம்மேளனங்களின் பிரதிநிதிகள் தவிர தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, குமார் மங்களம் பிர்லா, கவுதம் அதானி, சைரஸ் மிஸ்திரி, அஸிம் பிரேம்ஜி, திலிப் சாங்வி, ஒய்.சி. தேவேஷ்வர், ஐஎல்எப்எஸ் தலைவர் ரவி பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

8 பொருளாதார நிபுணர்கள், 14 தொழில் நிறுவன பிரதிநிதிகள், 4 முன்னணி வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார், ஐடிஎப்சியின் ராஜிவ் லால், பந்தன் வங்கியின் சந்திரசேகர் கோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் பொருளாதார வளர்ச்சியில் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. அண்டை நாடான சீனாவில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக தொழில்துறையினர் துணிந்து முடிவுகளை எடுப்பதற்குத் தயங்குகின்றனர். ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. கரன்சி மதிப்பும் ஸ்திரமாக இல்லை என்பதை இக்கூட்டத்தில் அசோசேம் குறிப்பிட்டது.

அத்துடன் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக 12 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அசோசேம் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அளித்தது.

அதில் முக்கியமாக கடனுக்கான வட்டியை 1.25 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. மார்ச் மாதத்துக்குள் இந்த அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று தொழில்துறையினர் வலி யுறுத்தியிருந்தனர்.

வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன் தொகையில் 45 சதவீதம் தொழில் துறையினர் பெற்றதாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீதமாகும். எனவே அடுத்த கடன் கொள்கையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில்துறையினருக்கு எளிதாகக் கடன் கிடைக்க வழியேற்படும் என்று தொழில் துறையினர் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT