வணிகம்

உலகச் சந்தையில் போட்டியிட விலை நிர்ணயம், தரம் அதிகரிப்பு, நவீன தொழில்நுட்பம் அவசியம்: நிதின் கட்கரி

செய்திப்பிரிவு

ஏற்றுமதியை இரட்டிப்பாக்க ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறு, சிறு, நடுத்தரத்தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகச் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு விலையை நிர்ணயிக்கவும், தரத்தை அதிகரிப்பதற்காக தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துவது; ஆராய்ச்சியை மேம்படுத்தவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகமும், ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் பணிமனை ஒன்றை துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் கட்கரி, குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவினரிடையே பணப்புழக்கம் ஏற்படுத்தவும், அவர்களுக்கான பல்வேறு அழுத்தங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும், பொருளாதாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, அரசு அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்று கூறினார்.

உலகத்தரம் வாய்ந்த பொருள்கள், வடிவமைப்புகள் ஆகியவற்றுக்கான பரிசோதனை ஆய்வுக்கூடங்களை அமைப்பதன் அவசியத்தையும்; வடிவமைப்புக்கான மையம் ஒன்றை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

துணித்துறையில் மூங்கில் போன்ற புதிய கச்சாப் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பொருளாதாரத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது என்றும் இவற்றின் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த முடியும் என்றும் கூறிய அமைச்சர், குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின, பின்தங்கிய பகுதிகளில் இவை பெரும் பங்காற்ற முடியும் என்று கூறினார்.

இத்தகைய பகுதிகளில் ஆடை, துணி தொழில் நிறுவனங்கள் தொகுப்புகளை ஏற்படுத்தி, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, அத்தகைய பகுதிகளின் மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்ற வேண்டும் என்றும், இதற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கட்காரி கேட்டுக்கொண்டார்.
ஏற்றுமதியை இருமடங்காக அதிகரிக்குமாறு ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT