சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.
பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவால் முதலீட்டா ளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ. 2,02,654 கோடி முதல் ரூ.96,25,276 கோடி வரை சரிந்ததாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிந்து 25696 புள்ளிகளில் நிலை கொண் டுள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 185 புள்ளிகள் சரிந்து 7785 புள்ளிகளில் முடிந்துள்ளது.
உள்நாட்டு நிகர உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு எதிர்பார்ப்பை விட குறைந்தது மற்றும் சர்வதேச சந்தை காரணிகள் காரணமாக இந்திய சந்தையின் வர்த்தகம் நேற்று பாதிக்கப்பட்டதாக சந்தை நோக்கர்கள் தெரிவித்தனர்.
அனைத்து துறை குறியீடு களும் சரிந்தன. முக்கியமாக வங்கித்துறையின் கடும் சரிவைக் கண்டது. வர்த்தகத்தின் இடையில் சந்தை 703 புள்ளிகள் வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட பங்குகளில் 2081 பங்குகள் நஷ்டத்தை கண்டது. 604 பங்குகள் லாபம் கண்டிருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் புள்ளிவிவரங்கள் படி அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.675.32 கோடி மதிப்பிலான முதலீட்டை நேற்று வெளியே எடுத்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.17,500 கோடி மதிப்புக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். (கடந்த பத்து வருடங்களில் ஒரு மாதத்தில் இது அதிக பட்ச அளவாகும்) உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.681.93 மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
நேற்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 6.94 சதவீதம் சரிந்தது. பேங்க் ஆப் பரோடா, கோட்டக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ஹிண்டால்கோ பங்குகள் 5 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன.
இதற்கிடையே உள்நாட்டு நிகர உற்பத்தி மதிப்பு குறைந்துள்ளது. ஏப்ரல்- ஜூன் இடையிலான முதலாம் காலாண்டில் 6.7 சதவீதமாக உள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டில் இது 7.5 சதவீதமாக இருந்தது.
2016-ல் ஜிடிபி வளர்ச்சி 8.1 முதல் 8.5 சதவீதத்தை எட்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது நிலையில் ஜிடிபி விகிதம் சரிந்துள்ளது. எட்டு முக்கிய துறைகளில் வளர்ச்சி ஜூலை மாதத்தில் 1.1 சதவீத குறைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 3 சதவீதமாக இருந்தது. உருக்கு மற்றும் சுரங்க துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது.