ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் : படம் ஏஎன்ஐ 
வணிகம்

கடனுக்கான வட்டிவீதத்தில் மாற்றமில்லை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி மைனஸில் செல்ல வாய்ப்பு: ரிசர்வ் வங்கி

பிடிஐ


வங்கிக் கடனுக்கான வட்டிவீதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக தொடர்கிறது என்றும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நெகட்டிவ்வாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டின் இறுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) நெகட்டிவாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.

இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

முதலீடுகள் அதிகரிக்கவும், தொழில்துறைக்கும், வரத்தகத்துக்கும் ஊக்களிக்க வேண்டுமெனில் வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சுணக்க நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கெனவே 5 முறை வட்டி விகிதத்தைக் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதன்படி தற்போது கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:

வங்கிக்கடனுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை என்று நிதிக்குழுகூட்டம் முடிவு செய்தது. அதன்படி வட்டி வீதம் 4 சதவீதம் எனும் அளவிலேயே தொடர்கிறது. எதிர்வரும் காலங்களில் பொருளதாார வளர்ச்சியை ஊக்குப்படுத்துவதற்காக வட்டி வீதத்தில் தேவைப்பட்டால் மாற்றம் செய்யப்படும்

இறுதிநிலை வட்டி வீதம் எனப்படும எம்எஸ்பி ரேட் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 4.25 அளவிலேயே தொடர்கிறது.

ஏப்ரல், மே மாத பொருளாதார சுணக்கத்திலிருந்து மீண்டு வந்தபோது மீண்டும் புதிய தொற்றுகள் வந்ததால், ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது.

உள்நாட்டு அளவில் பெட்ரோலியப் பொருட்களி்ன் தேவையும் குறைந்தது.மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டதால், பணவீக்கமும் அதிகரித்தது. 2-வது காலாண்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2-வது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நெகடிவ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு முழுவதும் அவ்வாறே இருக்கும்.

உலகப் பொருளாதரச் செயல்பாடு தொடர்ந்து தேக்கமடைந்துள்ளது.கரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றமான சூழல் இல்லை. வரும் கரீப் பருவத்தில் அறுவடையின் மூலம் கிராமப்புறங்களில் தேவை அதிகரிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது

SCROLL FOR NEXT