அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று கடந்த சில வாரங்களாக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதற்கான கூட்டம் கடந்த புதன் மற்றும் வியாழன் அன்று வாஷிங்டனில் நடந்தது. சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை என்று அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெனட் ஏலன் தெரிவித்தார்.
உள்நாட்டில் இருக்கும் குறைவான பணவீக்கம் மற்றும் சர்வதேச நிதிச்சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கம் ஆகிய காரணங்களால் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. தற்போது எடுக்கும் முடிவுகளால் பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேசமயத்தில் இந்த வருட இறுதியில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதும் சூசகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்களை உயர்த்து வதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால் டாலர் மதிப்பு உயர்ந்தது, அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிந்தது உள்ளிட்ட பிற காரணங்களால் அமெரிக்காவின் வளர்ச்சி குறைய வாய்ப்பு இருக்கிறது. தவிர சர்வதேச பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை இப்போது எடுக்க வேண்டாம் என்று குழு முடிவெடுத்திருப்பதாக ஜெனட் ஏலன் தெரிவித்தார்.
கடைசியாக 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. வட்டி விகித முடிவெடுக்கும் குழுவில் 9 உறுப்பினர்கள் இதே நிலை தொடரலாம் என்று கூறினர். ஒருவர் மட்டும் 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்று கருத்து தெரிவித்தார். தற்போது 0 முதல் 0.25 சதவீத அளவுக்கு வட்டி விகிதம் உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதே வட்டி விகிதம் தொடருகிறது.
‘இந்தியாவுக்கு நல்லது’
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு நல்லது என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு இன்னும் சில காலம் ஆகும். அதற்குள் வளரும் நாடுகள் தங்களுடைய கொள்கைகளை மாற்றி வடிவமைத்துக்கொள்ள முடியும் என்றார்.
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையை பலமாக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் கணிசமான வட்டி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் நாம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிடுவோம். அதற்காக இது நமக்கு கிடைத்த கூடுதல் நேரம் என்று அர்த்தம் அல்ல. நாம் பலப்படுத்தும் நடவடிக்கையை மேலும் தொடர்ந்து எடுப்பதற்கான காலம் இதுவாகும்.
ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்குமா என்று நாம் கணிக்க முடியாது. தகவல்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும். அரசும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து விவாதித்து வருகிறது. கடந்த முறை கூட பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். ஆனால் வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி எடுக்க கூடியது என்றார்.