ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஆளுநர்கள் குழுவின் 5-வது வருடாந்திர கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆளுநர்கள் குழு கூட்டத்தில் வங்கியின் வருங்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதம், வங்கியின் தலைவர் தேர்தல் உள்ளிட்ட அலுவல் நடைமுறைகளைக் கொண்டதாக இருந்தது.
ஏஐஐபி 2030- அடுத்த பத்தாண்டில் ஆசியாவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் என்ற கருப்பொருள் பற்றி வட்டமேஜை விவாதம் நடைபெற்றது.
சீதாராமன் தமது உரையில், கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட தனது உறுப்பு நாடுகளுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் துரித நிதியுதவி வழங்கும் முயற்சிகளுக்காக ஏஐஐபி-யை பாராட்டினார். சார்க் நாடுகளுக்காக கோவிட்-19 அவசர நிதியத்தை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியை சீதாராமன் குறிப்பிட்டார். கோவிட்-19 தொற்றைச் சமாளிக்க முக்கிய மருத்துவ சுகாதாரக் கருவிகள் வழங்குவதில் இந்தியாவின் முயற்சிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி சோதனைகளுக்கான உலக நாடுகளின் முயற்சிகளுக்கு தற்போது இந்தியா அளித்துவரும் ஆதரவு பற்றியும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர, ஜி20 கடன் சேவை தள்ளுபடி முன்முயற்சியில் இந்தியாவின் பங்கேற்பை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தின் அனைத்துத் துறை மற்றும் பிரிவினரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் ஏழை நல்வாழ்வுத் திட்டத்தில் 23 பில்லியன் டாலர், சுயசார்பு இந்தியா தொகுப்பில் 295 பில்லியன் டாலர் ஒதுக்கீடு உள்ளிட்ட கோவிட்-19 தொற்றைச் சமாளிக்க இந்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீதாராமன் பட்டியலிட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி தனது பணக்கொள்கையை தளர்த்தியுள்ளது. குறிப்பாக இருப்பு தேவைகளைக் குறைத்திருப்பதுடன் , ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீத அளவுக்குப் பொருளாதார பணப்புழக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தியா, 1.4 டிரில்லியன் டாலர் செலவு மதிப்பில், தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் (National Infrastructure Pipeline - NIP) 2020-2025 திட்டத்தை தொடங்கியுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
ஏஐஐபியின் பங்குதாரர்களுக்கு ஏராளமான புதிய முதலீட்டு வாய்ப்புகளை இது உருவாக்கியுள்ளது. மேலும், புதிய நிதி உபகரணங்களை அறிமுகப்படுத்துதல், தனியார் துறை நிதியைத்
திரட்டுதல் 2030-இல் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான சமூக உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வங்கியிடமிருந்து எதிர்பார்க்கும் சிலவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 சிக்கலில் இருந்து மீளுவதற்கான காலநிலை வளர்ச்சி நெகிழ்திறனை ஒருங்கிணைத்தல், நிலைத்த எரிசக்தி அணுக்க உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும். செயல்திறன் மிக்க திட்ட மேலாண்மை மற்றும் அமலாக்கத்திற்கு உதவும் பிராந்திய அமைப்பை உருவாக்குமாறு வங்கிக்கு சீதாராமன் யோசனை தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகள் என்னும் குறுகிய காலத்தில் மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டுவதற்கு காரணமான ஏஐஐபி வங்கி மேலாண்மைக்கு நிதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார். வங்கியின் வருங்கால முயற்சிகள் வெற்றியடையவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.