வணிகம்

வெட்டுக்கிளிகளால் தொடரும் பாதிப்பு;  3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பில் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியாணா, உத்தரகாண்ட், பிஹார் மாநிலங்களில் 3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2020 ஏப்ரல் 11 முதல் ஜூலை 19 வரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில், 86,787 ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2020 ஜூலை 19 வரை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியாணா, உத்தரகாண்ட், பிஹார் மாநிலங்களில் 1,83,664 ஹெக்டேர் பரப்பில் மாநில அரசுகளால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2020 ஜூலை 19-20 இரவில், ராஜஸ்தானில், ஜெய்சால்மர், பார்மர், பிக்கானிர், சுரு, அஜ்மீர், சிகார், பாலி ஆகிய எட்டு மாவட்டங்களில் 31 இடங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெட்டுக்கிளி வட்டார அலுவலகங்களால் மேற்கொள்ளப்பட்டன.

இது தவிர, உத்தரப் பிரதேச வேளாண் துறையும் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அதே இரவில் , சிறு அளவிலும், பரவலாகவும் வெட்டுக்கிளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது, தெளிப்பான் வாகனங்களுடன் 79 கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியாணா, பிஹார் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

எனினும், ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் சிறிதளவு பயிர்ச்சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று இளஞ்சிவப்பு நிற இளம் வெட்டுக்கிளிகளும், மஞ்சள் நிற முதிர்ந்த வெட்டுக்கிளிகளும், ஜெய்சால்மர், பார்மர், பிக்கானிர், சுரு, அஜ்மீர், சிகார், பாலி மாவட்டங்களிலும், உ.பி.யின் ராம்பூர் மாவட்டத்திலும் காணப்பட்டது.

SCROLL FOR NEXT