வரி செலுத்துவோர், தங்களது வருமானவரிக் கணக்கை, யாருடைய உதவியுமின்றி, மின்னணு முறையில் விரைவாகவும், சரியாகவும் தாக்கல் செய்ய புதிய படிவம் 26ஏ.எஸ். வழிவகை செய்துள்ளது.
நடப்பு மதிப்பீட்டு ஆண்டிலிருந்து, வரிசெலுத்துவோர் தங்களது பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக, நிதிப் பரிவர்த்தனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வகையான கூடுதல் விவரங்களை, மேம்படுத்தப்பட்ட 26ஏ.எஸ்.படிவத்தில் காணலாம்.
குறிப்பிட்ட இந்த பணப் பரிவர்த்தனை அறிக்கையை தாக்கல் செய்வோரிடமிருந்து, வருமானவரித்துறைக்கு கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், அந்த விவரங்கள் தற்போது, படிவம் 26ஏ.எஸ்.-ஸின் இ-பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வரி பொறுப்புணர்வு மற்றும் மின்னணு முறையில் தாங்களாகவே கணக்கு தாக்கல் செய்வதை எளிதாக்குவதன் மூலம், வரி செலுத்துவோர், அவரது வருமான வரிக் கணக்கு விவரங்களை நல்ல சூழலில் சரியாகக் கணக்கிட முடியும். அத்துடன், வரி நிர்வாகத்தில், மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வையும் இது ஏற்படுத்தும்.
சம்பளம் வழங்குவோரால் பிடித்தம் செய்யப்படும் வரி மற்றும் வருமான வரித்துறையிடம் செலுத்தப்பட்ட வரி விவரங்களை, நிரந்தரக் கணக்கு எண் PAN அடிப்படையில் தெரிவிப்பதுடன், செலுத்தப்பட்ட பிற வரி விவரங்கள், திரும்பப் பெற்ற வரித்தொகை மற்றும் வரிப்பிடித்தம் செய்த இடத்தில் நடைபெற்ற குறைகளைத் தெரிவிக்க பழைய 26ஏ.எஸ். படிவம், பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது, வரிசெலுத்துவோருக்கு உதவி செய்யக்கூடிய பணப்பரிவர்த்தனை அறிக்கை, வரி செலுத்துவோரின் அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகளை நினைவுகூர்ந்து, கணக்கு தாக்கல் செய்யும்போது தேவைப்படும் விவரங்களை அளிக்க உதவும்.
சேமிப்புக் கணக்குகளில் ரொக்கமாக செலுத்திய / திரும்பப்பெற்ற தொகை, அசையா சொத்துக்கள் விற்பனை / கொள்முதல், காலக்கெடுவுடன் கூடிய முதலீடுகள், கிரெடிட் கார்டுக்கு செலுத்திய பணம், வாங்கப்பட்ட பங்கு விவரங்கள், அந்நியச் செலாவணி, பரஸ்பர நிதியம், பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு ரொக்கமாக செலுத்திய தொகை உள்ளிட்ட விவரங்களை, வங்கிகள், பரஸ்பர நிதி, கடன்பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் பதிவாளர் அல்லது சார்-பதிவாளர் போன்ற “குறிப்பிட்ட நபர்களிடம்” இருந்து பெறுவதற்கு வருமானவரித்துறையால் பயன்படுத்தப்படும் வருமானவரிச்சட்டம்-1961, பிரிவு 285பி.ஏ.-யின்படி, 2016 முதல், தனிநபர்கள் மேற்கொண்ட உயர்மதிப்பு பணப் பரிவர்த்தனைகளை அறிந்து கொள்ளலாம்.
பணப் பரிவர்த்தனை அறிக்கை-யின்படி, தற்போது அதுபோன்ற தகவல்கள் அனைத்தும், புதிய படிவம் 26ஏ.எஸ்.ஸில் தெரிவிக்கப்பட வேண்டும்.
புதிய 26ஏ.எஸ்.படிவத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு வரி செலுத்துவோரும், பரிவர்த்தனை வகைகள், பணப்பரிவர்த்தனை அறிக்கையைத் தாக்கல் செய்பவரின் பெயர், பரிவர்த்தனை தேதி, தனிநபர் / கூட்டுப் பரிவைர்த்தனை, பங்குதாரர்களின் எண்ணிக்கை, தொகை, பணம் செலுத்தும் விதம் மற்றும் பிற குறிப்புகளை, படிவத்தின் இ-பிரிவில் தெரிவிக்க வேண்டும்.
அதற்கும் மேலாக, நேர்மையாக வரிசெலுத்துவோர் தங்களது வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, மேம்பட்ட பணப்பரிவர்த்தனைகளைத் தெரிவிக்க இது உதவுவதோடு, பணப் பரிவர்த்தனைகளை மறைக்க முயற்சிப்பதை இது தடுத்து நிறுத்தும். அத்துடன், 2015-16ஆம் நிதியாண்டு வரையிலான வருடாந்திர தகவல் கணக்கில் பெறப்பட்ட தகவல்களும், புதிய 26ஏ.எஸ்.படிவத்தில் இடம்பெறும்.