ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அசெம்பிள் செய்யும் நிறுவனமான ‘பேகட்ரான் கார்ப்’, இந்தியாவில் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இந்திய அரசு உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தை அறிவித்தது. 6.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் திட்டத்தில் ஊக்கத் தொகைகளும், உற்பத்திக்குத் தயார் நிலையில் உள்ள கிளஸ்டர்களை உருவாக்கித் தரும் அறிவிப்புகளும் அடக்கம்.
இந்த அறிவிப்பை அடுத்து பேகட்ரான் கார்ப் என்ற நிறுவனம்தனது உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் கார்ப் நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை நிறுவியுள்ளன. தற்போது பேகட்ரானும் இவற்றுடன் இணைந்து இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 50 சதவீதத்துக்கும் மேலான தயாரிப்புகளை பேகட்ரான் நிறுவனம் தயார்செய்கிறது. சீனாவில் பங்களிப்பைக் குறைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதால் இந்தியாவில் ஆலையை அமைக்க உள்ளது.
இந்தியாவில் சமீப காலத்தில் அதிக அளவிலான முதலீடுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கூகுள், பேஸ்புக் ஆகியவை ஜியோவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்கின்றன. அமேசான் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. இதன்மூலம் இந்தியா உலகின் முக்கிய ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையாக மாற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.