வணிகம்

ஊழியர்கள் வேலை நீக்கம் இல்லை: விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தகவல்

செய்திப்பிரிவு

விப்ரோ நிறுவனத்தின் 74-வதுஆண்டுப் பொதுக்கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தின் போது பேசிய நிறுவனத் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, ‘‘நிறுவனத்தில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் தொழில்நடவடிக்கை ரீதியில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இப்போது இல்லை’’ என்றார்.

தற்போது கரோனா பாதிப்பால் விப்ரோ நிறுவனத்தின் 95 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்கிறார்கள். இந்தப் போக்குவரும் காலங்களிலும் தொடரும் வாய்ப்புகள் அதிகம். வீட்டிலிருந்தபடி வேலை, அலுவலகத்தில் இருந்து வேலை இரண்டையும் கலந்த ஒரு பணிச் சூழல் 12-18 மாதங்களில் உருவாகலாம் என்று பிரேம்ஜி கூறினார்.

மேலும் அமெரிக்கா எடுத்துள்ள ஹெச்1பி விசா தடை நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. எனினும், விப்ரோ அமெரிக்காவில் 70 சதவீதஊழியர்களை அமெரிக்கர்களாகவே கொண்டிருக்கிறது. எனவே, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.

உலகம் முழுவதுமே கரோனா பாதிப்பால் வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் போக்கு மாறியுள்ளது. ஆனாலும் உள்கட்டமைப்பு, கிளவுட், விர்ச்சுவல் ரிமோட் ஆக்சஸ் போன்றவற்றில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. விப்ரோ சைபர் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் வலுவாக இருப்பதால் தொடர்ந்து வளர்ச்சிக்கான சாத்தியங்களுடன் இருக்கிறது என்று ரிஷாத் பிரேம்ஜி கூறியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி.நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் மொத்த தொழில் வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்கு 59.1 சதவீதமாகும். இந்தியாவுக்கு வெளியே விப்ரோ 41 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,88,270 ஆகும்.

SCROLL FOR NEXT