ம.பி. மாநிலத்தில் சாகுபடி செய்யப்படும் பாசுமதி அரசிக்கும் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.
பாசுமதி அரிசியின் பூர்வீகம், பஞ்சாப். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பஞ்சாப் இரண்டாகப் பிரிந்தது. தற்போது, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் உள்ள பஞ்சாப் மாநிலங்களில், பாசுமதி அரிசி விளைகிறது. இதுதவிர, ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், டில்லி ஆகிய இடங்களிலும், பாசுமதி அரிசி விளைகிறது.
பாசுமதியின் விளைச்சல், உற்பத்தி, விற்பனை ஆகியவற்றிற்கு, சட்டபூர்வ உரிமையை பெற, புவிசார் குறியீடு உதவுகிறது. எனவே, பாசுமதிக்கு புவிசார் குறியீடு கோரி, இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளன.
மத்திய பிரதேசமும், 13 மாவட்டங்களில், பாசுமதி அரிசியை பாரம்பரியமாக பயிரிட்டு வருவதாகக் கூறி, புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பித்துள்ளது. இந்தநிலையில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவரிடம் ம.பி. மாநிலத்தில் சாகுபடி செய்யப்படும் பாசுமதி அரசிக்கும் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகஅளவில் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்கிறோம். எனவே ம.பி. மாநிலத்தில் சாகுபடி செய்யப்படும் பாசுமதி அரசிக்கும் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.