மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து 2-வது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாதம் மிகவும் குறைவாக ரூ. 4 வரை நகரங்களுக்கு ஏற்றார்போல் உயர்த்தப்பட்டுள்ளது
கடந்த மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.37 வரை விலை உயர்ந்துள்ளது.இந்த மாதம் ஒரு ரூபாய் முதல் ரூ.4 வரை அதிகரித்துள்ளது
குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் அளிக்கப்படுகிறது. இந்த 12 சிலிண்டருக்கும் அதிகமாகத் தேவைப்படுவோர் மானியமில்லாமல் சந்தை விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கடந்த பிபர்வரி முதல் ஏப்ரல் வரை மானியமில்லாத சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் 53 ரூபாயும், ஏப்ரல் மாதத்தில் 61.50 ரூபாயும், மே மாதம் 162.50 ரூபாயும் குறைக்கப்பட்டது.
மொத்தமாக கடந்த 3 மாதங்களில் மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.277 குறைந்தது.
இந்தச் சூழலில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, சிலிண்டர் விலை ரூ.11.50 முதல் ரூ.37 வரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் உயர்த்தின.
கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து 22 முறை உயர்த்தப்பட்டதால், சமையல் சிலிண்டர் விைலயும் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதற்கு ஏற்றார்போல், மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.594 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மெட்ரோ நகரங்களில்வாட் வரிக்கு ஏற்றார்போல் அதிபட்சமாக ரூ.4 வரை உயரக்கூடும்.
கொல்கத்தாவில் 4 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.620.50க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.3.50 உயர்த்தப்பட்டு ரூ.594க்கும், சென்னையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.610.50க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு ஜூலை 1-ம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன