வணிகம்

டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்களில் பிஎஸ்-IV மாசு வெளியேறும் நெறிமுறைகள்: ஆலோசனைகள் அளிக்கலாம்

செய்திப்பிரிவு

கட்டுமான உபகரண வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களில் பிஎஸ்-IV மாசு வெளியேறும் நெறிமுறைகளை ஒத்திவைக்க மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்வதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுமான உபகரண வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களில் பிஎஸ்-iv மாசு வெளியேறும் விதிமுறைகளை ஒத்தி வைப்பதற்கான மோட்டார் வாகன வரைவு விதிகளில் முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வரவேற்கிறது.

இது குறித்த அறிவிக்கை இம்மாதம் 19-ஆம் தேதி அன்றுவெளியிடப்பட்டுள்ளது. இதனை www.morth.gov.in என்ற வலைத்தளத்தில் காணலாம். கோவிட்-19 வைரஸ் தொற்று நிலைமையால் அடுத்த கட்ட மாசு வெளியேறும் நெறிமுறைகளை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்துவதற்கு கால அவகாசம் வேண்டுமென மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் கட்டுமான உபகரண உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஜூன்-19, 2020 அன்று ஜிஎஸ்ஆர் 393 (இ) வரைவு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு அமைச்சகம், கட்டுமான உபகரண வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் தொடர்பான பிஎஸ் (சிஇவி / டிஆர்இஎம்)-IV மாசு வெளியேறும் விதிமுறைகளை அக்டோபர் 1, 2020-இல் இருந்து அக்டோபர் 1 2021-க்கு ஒத்திவைப்பது தொடர்பான வரைவு அறிவிக்கையை வெளியிட்டது.

இதுகுறித்த ஆலோசனைகளை வரவேற்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள் அல்லது கருத்துகளை இணைச் செயலாளர் (எம்.வி.எல்), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்ற வீதி, புது டெல்லி110001 (மின்னஞ்சல்: jspb-morth@gov.in ) க்கு ஜூலை 18, 2020 வரை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT