கடந்த இரண்டு நிதியாண்டுகளில் இபிஎப்ஓ சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ அண்மையில் வெளியிட்ட தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகள், 2017 செப்டம்பர் மாதம் சம்பளப்பட்டியல் தரவுத் தொகுப்பு பெறப்பட்டதிலிருந்து, ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் சந்தாதாரர் அடிப்படை எண்ணிக்கை உயர்ந்து வருவதைக் காட்டுகிறது. சம்பளப் பட்டியல் தரவு, 2018-19, 2019-20 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த வருடாந்திரப் புள்ளி விவரத்தை அளித்துள்ளது. சந்தாதாரர்களின் நிகர அடிப்படை 2018-19-இல் 61.12 லட்சத்திலிருந்து 2019-20-ல் 78.58 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 28 சதவீத உயர்வாகும். வெளியிடப்பட்ட தரவு, சேர்ந்துள்ள புதிய சந்தாதாரர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்பையும் உள்ளடக்கியாதாகும்.
குறைந்த அளவு சந்தாதாரர்கள் வெளியேறிய போதும், முன்பு வெளியேறியவர்கள் அதிக அளவில் மீண்டும் சேர்ந்ததால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2019-20-ஆம் ஆண்டுக்கான வரி இல்லாத வரவு 8.5 சதவீதம் ஆகும். இது இதர சமூகப் பாதுகாப்புத் தொகை மற்றும் நிரந்தர வைப்புத் தொகைகளில் அதிக அளவாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி 2019-20-க்கான வெளியேற்றத்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% அளவுக்கு குறைக்க உதவியுள்ளது.
மேலும், 2018-19-இல் 43.78 லட்சமாக இருந்த வெளியேறிய சந்தாதாரர்கள் மீண்டும் சேரும் எண்ணிக்கை, 2019-20-இல் 78.15 லட்சமாக உயர்ந்து, 75 சதவீதம் என்கிற வலுவான அதிகரிப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பெற்றுள்ளது. பல சந்தாதாரர்களின் விஷயத்தில், பழைய வேலையை விட்டு விட்டு, புதிய வேலையில் சேரும் போது, பழைய பிஎப் கணக்கிலிருந்து புதிய கணக்குக்கு இருப்பை மாற்றுவதற்கு தானியங்கி மாற்ற வசதி தடையற்ற விதத்தில் உதவுகிறது. இதன் மூலம் உறுப்பினர் அந்தஸ்து தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2019-20-ஆம் ஆண்டில் வயது வாரியாக செய்யப்பட்ட ஆய்வில், 26 முதல் 28, 29 முதல் 35 மற்றும் 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் நிகரப் பதிவு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீததிற்கும் அதிகமாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஆன்லைன் மூலம் தரமான சேவை வழங்குவதில் அபரிமிதமான முன்னேற்றம் காணப்படுவதால், நாட்டின் பணியாளர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி சேவையை ஆர்வத்துடன் அணுகுவதற்குக் காரணமாகியுள்ளது.
மேலும், பிஎப்-பில் சேரும் தொகையை எடுப்பதற்கு இனி சிரமப்படத் தேவையில்லை. ஊழியர் வருங்கால வைப்பு நிதி, கொவிட்-19 அட்வான்ஸ் தொகையை 3 நாட்களுக்குள் வெளியிட்டு வருகிறது. இதனால், பிஎப் தொகையை சந்தாதாரர்களுக்கு தேவைப்படும் போதோ, சிக்கலான நேரத்திலோ எடுத்துக் கொள்ளக்கூடிய வசதி தற்போது உள்ளது. இதே போல, வேலை இழப்பு, திருமணச்,செலவு, உயர்கல்வி, வீடு கட்டுதல், மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கு அட்வான்ஸ் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், 2019-20-இல் பெண் பணியாளர்களின் பதிவு 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அமைப்பு ரீதியிலான பணிகளில் பெண்கள் அதிகம் சேர்ந்து வருவதை இது காட்டுகிறது.