சிங்கப்பூர் நிறுவனமான ஜிஐசி நிறுவனத்துடன் இந்தியாவின் டிஎல்எப் நிறுவனம் இரண்டு திட்டங்களுக்கு மட்டும் கூட்டு சேர்ந்திருக்கிறது. இந்த திட்டங்களில் 50 சதவீத பங்கினை 1,990 கோடி ரூபாய்க்கு ஜிஐசி நிறுவனத்துக்கு டிஎல்எப் விற்றிருக்கிறது.
பணப்புழக்கத்தை அதிகரிக் கவும், கடனை குறைக்கவும் டிஎல்எப் முடிவு செய்திருக்கிறது. தனிப்பட்ட திட்டங்கள் அடிப்படையில் பிரைவேட் ஈக்விட்டி நிதியை டிஎல்எப் திரட்டுவது ஐந்து வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் நடக்கிறது.
இதுகுறித்து மேலும் விவரங்கள் தெரியவில்லை என்றாலும் 50 சதவீத அளவுக்கு ஜிஐசி நிறுவனத்துக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜூன் 30 வரை டிஎல்எப் நிறுவனத்துக்கு 21,598 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது. அதிக கடன் இருப்பது மற்றும் ரியல் எஸ்டேட் சந்தையில் பெரிய ஏற்றம் இல்லாதது ஆகிய காரணங்களால் திட்டங்கள் அடிப்படையில் நிதி திரட்டப் போவதாக கடந்த பிப்ரவரி மாதம் டிஎல்எப் தெரிவித்தது.
இனி வருங்காலத்திலும் திட்டங்கள் அடிப்படையில் முதலீடுகள் பெறப்படும் என்று டிஎல்எப் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் சவுரப் சாவ்லா தெரிவித்தார்.
இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். டிஎல்எப் நிறுவனத்துடன் கூட்டு சேர்வதன் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த முடியும் என்று ஜிஐசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லோ வாய் இயோங் (Loh Wai Keong) தெரிவித்தார். அடுத்தடுத்த திட்டங்களிலும் டிஎல்எப் நிறுவனத்துடன் கூட்டு சேர திட்டமிடுவதாகவும் கூறினார்.
இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்த இந்த திட்டத்தில் 50 லட்சம் சதுர அடிக்கு வீடுகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டங்களாக இந்த திட்டம் முடிவடையும். முதல் பகுதி இன்னும் 12 மாதத்தில் முடிவடையும் என்றும் மொத்த திட்டம் ஐந்தாண்டுகளில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஐசி நிறுவனம் இந்தியாவில் பல ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறது. கடந்த செப்டம்பரில் பிரிகேட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. அந்த திட்டத்தில் 1,500 கோடி முதலீடு செய்தது. தென் இந்தியாவில் வாடிகா குழுமத்தில் 150 கோடி முதலீடு செய்தது. மும்பையை சேர்ந்த ரியால்டி நிறுவனமான நிர்லான் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை 1,280 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த வருடம் பந்தன் நிதிச்சேவை நிறுவனத்திலும், ஓலா நிறுவனத்திலும் ஜிஐசி முதலீடு செய்திருக்கிறது.
கடனை குறைப்பதற்காக கடந்த ஜுன் மாதம் டிடீ சினிமாஸ் நிறுவனத்தை பிவிஆர் நிறுவனத்துக்கு டிஎல்எப் விற்றது. கடந்த வருடம் அமான்ரெசார்ட்ஸ் நிறுவனத்தை 2,200 கோடி ரூபாய்க்கு டிஎல்எப் விற்றது. இதை தவிர இன்ஷூரன்ஸ் மற்றும் காற்றாலை வியாபாரத்தில் இருந்து டிஎல்எப் வெளியேறியது.
புதிதாக முதலீடு கிடைத்ததன் காரணமாக டிஎல்எப் பங்கு நேற்றைய வர்த்தகத்தில் 3.6 சதவீதம் உயர்ந்து 109 க்கு வர்த்தம் ஆனது.
இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்த இந்த திட்டத்தில் 50 லட்சம் சதுர அடிக்கு வீடுகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டங்களாக இந்த திட்டம் முடிவடையும்.