வணிகம்

பங்குச் சந்தையில் விரைவில் உயர்வு ஏற்படும்; இந்தியாவில் கரோனா பாதிப்பு மிகைப்படுத்தப்படுகிறது- முதலீட்டு நிபுணர் ஜூன்ஜூன்வாலா கருத்து

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கரோனா வைரஸ் பாதிப்பின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்று மிகைப்படுத்தி கூறப்படுகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு எழும். பங்குச் சந்தைகளில் மீண்டும் எழுச்சி காணப்படும் என்று பங்குச் சந்தை முதலீட்டு நிபுணர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அனைத்து நாடுகளிலும் உள்ள பங்குச் சந்தைகளின் தாயகமாக இந்திய பங்குச் சந்தை திகழும். விரைவிலேயே பங்குச் சந்தை எழுச்சி பெறும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டவுடன் இந்திய அரசு தனது செலவினங்களை அதிகரிக்கும். இதன் மூலம் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் மேலோங்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

பங்குச் சந்தையின் வர்த்தகமானது ஏற்ற, இறக்கங்களைக் கொண்டதுதான். இது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று உடனடி ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியாது. டெஸ்ட் போட்டி போல கொஞ்சம் காத்திருந்தால் மட்டுமே ரிசல்ட் தெரியும் என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்றம் குறித்து கேட்டதற்கு, விரைவாக சகஜ நிலைக்கு சந்தை திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பட்ட உயர்வு அது என்று குறிப்பிட்டார். தற்போதைக்கு பங்குச் சந்தையில் மிகப் பெரிய சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் எந்த சர்வதேச பங்குச் சந்தையும் மிகப் பெருமளவு லாபம் தரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தற்போது கோவிட்-19 நெருக்கடி, அதன் உண்மையான தன்மையைக் காட்டிலும் மிக அதிகமாகவே மிகைப்படுத்தப்பட்டுவிட்டது. இதனால் தேவைற்ற அச்சமும், பய உணர்வும் மேலோங்கிவிட்டது. இது சாதாரண புளூ காய்ச்சல் தான். பிளேக் அல்லது புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோயல்ல. நீண்ட நாள் அடிப்படையில் இதில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கம்போல நாம் பயணம் மேற்கொள்வது, உணவகங்களுக்கு செல்வது ஆகிய நடவடிக்கைகள் விரைவிலேயே நடைபெறும் என்றார்.

சர்வதேச அளவில் பங்குச் சந்தை முதலீட்டு நிபுணராக வாரன் பஃபெட் கருதப்படுகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பங்குச் சந்தை நிபுணராக மதிக்கப்படுகிறார். கரோனா பாதிப்பு குறித்து அரசு மதிப்பீடு செய்து வருகிறது. இதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறினார்.

பெரும்பாலான நிறுவனங்கள் கோவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு விரைவிலேயே லாபம் ஈட்டத் தொடங்கும் என்றார்.

சமீபத்தில் வங்கிப் பங்குகளில் பெரும் சரிவு காணப்பட்டது குறித்து கேட்டதற்கு, இது ஸ்திரமற்ற நிலையை உணர்த்துகிறது. அதேபோல வங்கிகளின் வாராக் கடன் நிலைமை இந்த ஆண்டு டிசம்பரில்தான் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். அதேசமயம் வீட்டு வசதி நிதித்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று தான் கருதவில்லை என்றார்.

திவாலாகும் என்பது யூகம்

பல நிறுவனங்கள் திவாலாகும் என்ற யூகங்கள் எழுகின்றன, ஆனால் இவ்விதம் கூறுவோர் ஒரு உண்மை நிலவரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்துவதற்கு கால அவகாசத்தை அரசு அறிவித்தது. எனினும் வங்கிகளில் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டவர்கள் மிகக்குறைவு. இதில் இருந்தே திவாலாகும் என்று கூறப்படும் யூகம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதை கணிக்க முடியும் என்றார் ஜூன்ஜூன்வாலா.

SCROLL FOR NEXT