கரோனா பொதுமுடக்கத்தால் மக்கள் எதிர்கொண்டுவரும் பொருளாதாரச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகை வங்கிக் கடன்களுக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான தவணைத் தொகையை ஒத்திவைக்கும் வாய்ப்பை வழங்கியது ரிசர்வ் வங்கி. அதன் அடுத்தகட்டமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான அடுத்த மூன்று மாதங்களுக்கும் மாதத் தவணை ஒத்திவைப்பு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், இதை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைக் குளறுபடிகளால் வங்கிக் கடன் வாங்கியிருப்பவர்கள் திணறி வருகின்றனர்.
பொருளாதார ரீதியிலான நலிவிலிருந்து மக்களை மீட்கத்தான் கடன் தவணை ஒத்திவைப்பு முறையை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்தியது. எனினும், ஒத்திவைக்கப்பட்ட தவணை மாதங்களுக்கான வட்டி கணக்கில் கொள்ளப்பட்டு, அதுவும் அசல் தொகையோடு சேர்க்கப்படுவதால், கூடுதலாக வட்டிக்கு வட்டி கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் கடன்தாரர்கள். தள்ளிவைக்கப்பட்ட தவணை மாதங்களுக்கான வட்டியை ரத்து செய்யக் கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது.
மார்ச் மாதத்தின் மத்தியில்தான் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்ச் தொடக்கத்திலேயே கடன்களுக்கான தவணைத் தொகையை வங்கிகள் பிடித்துவிட்டதால் அந்த மாதத்துக்கான தொகை திரும்பக் கிடைக்கவில்லை. இதனால் ஏப்ரல், மே மாதங்களுக்குத்தான் தவணைத் தொகை ஒத்திவைப்பு சலுகை கிடைத்தது. அந்தச் சலுகையைப் பெற்றிருந்த வாடிக்கையாளர்களுக்கு, ‘மேலும் கடன் தவணையைத் தள்ளிவைக்க விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டு எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றன. அதற்கு ‘ஆமாம்’ என பதில் அனுப்பினால் தவணைத் தொகை ஒத்திவைப்பு மிக எளிமையாக நீட்டிக்கப்படுகிறது.
ஆனால், எச்.டி.எப்.சி உள்ளிட்ட தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை இணைய வழியில் மீண்டும் விண்ணப்பித்தே அந்தச் சலுகையைப் பெற முடியும் எனும் நிலை உள்ளது. அதுவும் பெரும்பாலானவர்களுக்குத் தவணைத் தேதி ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியாக இருக்கிறது. சம்பளம் வாங்கிய கையோடு ஏராளமானவர்கள் தனியார் வங்கிகளின் இணையதளத்தில் ஒரே நாளில் விண்ணப்பிப்பதால் வங்கிகளின் சர்வரும் அவ்வப்போது முடங்கிவிடுகிறது. இதனால் இணையவழியில் தவணை முறையை ஒத்திவைக்க முடியாமல் தனியார் வங்கிகளை நோக்கி அவர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேநேரம் தனியார் வங்கிகள் சிலவற்றில் தவணைத் தொகை தள்ளிவைப்பை இணைய வழியில் ஏற்றுக்கொண்டாலும், இந்த மாதம் வழக்கம்போல் தவணைத் தொகை பிடிக்கப்படும் என்றும், அதன் பின்னரே, விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பணம் மீண்டும் வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் தனிநபர், தொழில், வீடு, வாகனக் கடன் வாங்கியவர்கள் இப்போதுவரை குழப்ப நிலையிலேயே இருக்கின்றனர்.
எனவே, வாடிக்கையாளர்கள், கடன்தாரர்களின் நலன் கருதி சலுகைகளை அறிவிக்கும் ரிசர்வ் வங்கி, அந்தச் சலுகைகளை வங்கிகள் செயல்படுத்தும் விதத்தையும் கண்காணிக்க வேண்டும் எனும் கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.