வணிகம்

அமேசான் ஏகபோகத்தை உடைக்க வேண்டிய நேரமிது: எலான் மஸ்க் கருத்து

ஐஏஎன்எஸ்

அமேசான் நிறுவனத்தை உடைத்து ஜனநாயகமயமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கோவிட்-19 பற்றிய சொல்லப்படாத உண்மைகள் என்ற புத்தகத்தை முன்னாள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் அலெக்ஸ் பெரன்ஸன் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இதை அமேசான் தளம் விற்பனைக்குக் கொண்டு வராமல் தணிக்கை செய்துள்ளது.

இதுகுறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அமெரிக்கத் தொழிலதிபரும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், "இது பைத்தியகாரத்தனமானது ஜெஃப் பெஸோஸ். அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏகபோகம் (எங்கிருந்தாலும்) தவறு" என்று பகிர்ந்துள்ளார்.

ஆனால் மஸ்க் ட்வீட் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே அந்தப் புத்தகம் மீண்டும் அமேசான் தளத்தில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டது. இதற்காக தனக்கு ஆதரவு தெரிவித்த மஸ்க் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, புத்தகம் மீண்டும் விற்பனைக்கு வந்துவிட்டது என்று பகிர்ந்திருந்தார் எழுத்தாளர் பெரன்ஸன். இது தெரியாமல் நடந்த தவறு, சரி செய்யப்பட்டுவிட்டது என அமேசான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க், அலெக்ஸ் பெரன்ஸன் இருவருமே ஊரடங்கை கடுமையாக எதிர்த்து வருபவர்கள். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவுகள் சர்வாதிகாரம் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் அமேசான் நிறுவனர் பெஸோஸை மஸ்க் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த வருடம் விண்வெளியில் வாழ்வது குறித்த திட்டங்கள் பற்றி பெஸோஸ் பகிர்ந்திருந்தார். இது ஒரு அபத்தமான சிந்தனை என மஸ்க் அப்போது கருத்து தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT