தற்சார்பு பொருளாதார கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் பொது கொள்முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஏலத்தொகை எதுவாக இருந்தாலும், கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் விநியோகஸ்தரிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை அண்மையில் பொது கொள்முதல் ( மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை) உத்தரவு , 2017-ஐ 29.05.2019 அன்று மாற்றியமைத்தது. வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், உற்பத்திப், பொருள்கள் தயாரிப்பு, சேவைகள் மற்றும் பணிகளுக்கு ஊக்கமளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசயனத்தை அடையாளம் கண்டு, குறைந்தபட்ச உள்ளடக்கம், கணக்கீட்டு முறை ஆகியவற்றைப் பரிந்துரைக்கும் போது, ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத்துறை தற்போது உள்ள உள்நாட்டு உற்பத்தித் திறன், உள்ளூர்ப் போட்டி ஆகியவற்றை மதிப்பிட்டுள்ளது.
ரசாயனங்கள், பெட்ரோ ரசாயனங்கள், பூச்சி மருந்துகள், சாயப் பொருள்கள் என 55 பல்வேறு விதமான பொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனங்களில் குறைந்தபட்ச உள்ளடக்கம், துறையால் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்டமாக ,2020-21-ஆம் ஆண்டுக்கு உள்ளடக்க விகிதம் 60 சதவீதமாக வரையறுக்கப்பட்டது. அதன் பின்னர் 2021- 2023 ஆண்டுகளுக்கு 70 சதவீதமாகவும், 2023-2025 ஆண்டுகளுக்கு 80 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. துறையால் அடையாளம் காணப்பட்ட 55 விதமான ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனங்களில், 27 பொருள்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக ரூ.50 லட்சத்துக்கும் குறைவான மதிப்பீட்டுக்கு உள்ளூர் விநியோகஸ்தர்கள் போட்டியிடத் தகுதி பெறுவர்.
எஞ்சிய 28 பொருள்களுக்கு, ஏலத்தொகை எதுவாக இருந்தாலும், கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் விநியோகஸ்தரிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். போதுமான உள்ளூர் திறன் மற்றும் போட்டியைக் கருத்தில் கொண்டு இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.