ட்விட்டர் மற்றும் ஸ்கொயர் நிறுவனங்கள் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸி கரோனா நிவாரணப் பணிகளுக்கு மேலும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகக் கொடுத்துள்ளார்.
ப்ராஜக்ட் 100 என்ற திட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு தலா 1,000 டாலர்கள் நிதி தரப்படுகிறது. இது பல்வேறு லாப நோக்கற்ற தன்னார்வ அமைப்புகளின் முயற்சி. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பமான இந்தத் திட்டத்தில் இதுவரை 84 மில்லியன் டாலர்கள் நிதி சேர்ந்துள்ளது. மொத்தம் ஒரு லட்சம் அமெரிக்கக் குடும்பங்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியைச் சேர்ப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
ஏற்கெனவே கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்டின் பில்கேட்ஸ் உள்ளிட்ட பல பணக்காரர்கள் இதற்காக நிதி அளித்துள்ளனர். சிறைகளில் கோவிட் பிரச்சினையைச் சமாளிக்க டார்ஸி மேலும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகக் கொடுத்துள்ளார். இதில் ஒரு கோடி முகக் கவசங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சிறைக் கைதிகளுக்கும், சிறை ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் டார்ஸி, தனது மொபைல் பேமண்ட் நிறுவனமான ஸ்கொயரிலிருந்து, தன் பங்கு ஒரு பில்லியன் டாலர்களை தனியாகப் பிரித்து, அதை சேவைகளுக்கான நிதியாக வைப்பதாக அறிவித்தார். அதிலிருந்துதான் தற்போது நிதி அளித்துள்ளார்.