வணிகம்

செலவு குறைவான இடங்களில் வசிக்கும் பணியாளர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்: ஃபேஸ்புக் அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

வீட்டிலிருந்தே அலுவல் வேலை செய்யும் பணியாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸ்க்கர்பெர்க் கூறியுள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக அலுவலகங்களில் தனி நபர் இடைவெளி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தே அலுவல் வேலை செய்ய முடிந்தால், அதையே தேர்வு செய்து கொள்ளவும் பணியாளர்களை நிறுவனங்கள் கேட்டுள்ளன.

அடுத்த 5-10 வருடங்களுக்குள் தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களில் பாதி எண்ணிக்கையை நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைக்கு மாற்ற ஃபேஸ்புக் முயன்று வருகிறது. இதில், எந்தெந்தப் பணியாளர்கள் தினப்படி செலவுகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கிறார்களோ அல்லது இடம்பெயர்கிறார்களோ அதற்கேற்றவாறு அவர்களின் சம்பளங்கள் குறைக்கப்படும் என்று மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது பணியாளர்களுடனான சந்திப்பில் பேசிய ஸக்கர்பெர்க், "வாழ்க்கைச் செலவு குறைவாக இருக்கும் பகுதிகளில், தொழிலாளர்கள் கூலி குறைவாக இருக்கும் பகுதிகளில் நீங்கள் வசித்தால் அந்த இடங்களுக்கு ஏற்றவாறு உங்கள் சம்பளம் குறைக்கப்படும். ஜனவரி 1-ம் தேதிக்குள் நீங்கள் வீட்டிலோ அல்லது எந்த இடத்திலிருந்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என்பதையோ நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அதற்கேற்றவாறு நிறுவனம் சம்பளத்தை முடிவு செய்யும். இது வருமான வரி, கணக்குகள் சரிபார்க்க அவசியமானதாகும். ஆனால் தங்கள் இருப்பிடங்கள் குறித்து தவறான தகவல்கள் அளிக்கும் பணியாளர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2018 நிலவரப்படி, ஃபேஸ்புக் ஊழியரின் சராசரி ஊதியம் மாதத்துக்கு 20,000 அமெரிக்க டாலர்கள். கரோனா நெருக்கடி காரணமாக, இந்த வருடம் முடியும் வரை பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT