வணிகம்

கடனுக்கான வட்டியைக் குறைக்கவில்லை ஆர்பிஐ: அரசின் நெருக்குதலை நிராகரித்தது

பிடிஐ

வங்கிகள் அளிக்கும் கடனுக்கான வட்டியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரசின் நெருக்குதலை ரிசர்வ் வங்கி முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.

நேற்று வெளியான நிதிக் கொள் கையில் கடனுக்கான வட்டிக் குறைப்பு எதையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.

இது தொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், முந்தைய வட்டிக் குறைப்பு நடவடிக்கையின் பலன் வாடிக்கையாளர்களைச் சென்றடையவில்லை என்றும், வட்டிக் குறைப்பு நடவடிக்கையை ஒரு சில வங்கிகள் மட்டுமே எடுத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிதி ஆண்டில் ரகுராம் ராஜன் வெளியிடும் மூன்றாவது நிதிக் கொள்கை இதுவாகும். ரெபோ வட்டி விகிதம் முந்தைய 7.25 சதவீத நிலையிலேயே தொடரும் என்றும் ரொக்கக் கையிருப்பு விகிதம் (சிஆஆர்) 4 சதவீத அளவிலேயே நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை மூன்று முறை கடனுக்கான வட்டி விகிதத்தை கால் சதவீதம் என்ற அளவில் இதுவரை 0.75 சதவீதம் குறைத்துள்ளது. ஆனால் வங்கிகள் 0.3 சதவீத அளவே வட்டியைக் குறைத்துள்ளதாக ராஜன் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்) எடுக்கப்போகும் நடவடிக்கை மற்றும் உணவுப் பொருள்களின் விலைவாசி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டே அடுத்த கட்ட நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்று தெரிகிறது.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை என்றே தெரிகிறது.

மேலும் பருவ மழை குறைவால் ஏற்படும் பாதிப்புகள், அதாவது உணவுப் பொருள்களின் விலை யேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய உத்தியை ஆர்பிஐ கையாண்டிருப்பதாகத் தெரி கிறது.

அனைத்துக்கும் மேலாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த மாதம் வட்டி விதிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவும் ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கா ததற்கு ஒரு காரணமாகும்.

பணவீக்க விகிதம் சற்று கவலையளிப்பதாக உள்ளதாக ராஜன் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் விஷயத்தைத் தவிர மற்ற எதுவும் சாதகமாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீத அளவுக்கு இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

இம்மாதத்தில் தனியார் வங்கிக் கான அனுமதி குறித்த அறிவிப்பை ரகுராம் ராஜன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ கவர்னரின் அதிகாரம்

இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் ரிசர்வ் வங்கி கவர்னரின் அதிகாரம் குறைக்கப்படுவது தொடர்பான வரைவு குறித்து பேசிய ராஜன், ஒரு தனி நபர் வட்டிக் குறைப்பு குறித்து தீர்மானிப்பதைவிட நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) தீர்மானிப்பது சிறப்பாக இருக்கும் என்று கருதுவதாகத் தெரிவித்தார்.

நிதிக் கொள்கை குழு (எம்பிசி) குறித்து அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் நிதி அமைச் சகம் இந்திய நிதிக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டது.

இதில் நிதிக் கொள்கைக் குழுவில் 7 பேர் இடம்பெறுவர் என்றும் இதில் 4 பேரை மத்திய அரசு நியமிக்கலாம் என்றும் 3 பேர் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால் ரிசர்வ் வங்கி கவர்னரின் அதிகாரம் குறைக்கப்படும். இதனால் இந்த வரைவு பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலையை மேலும் ஸ்திரப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முடிவு வரவேற்கத்தக்க ஒன்று என்றும், இது வங்கிகளின் நிதி ஆதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT