வரும் செப்டம்பர் 29-ம் தேதி நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கை அறிவிப்பு கூட்டத்தில் 0.25 சதவீத வட்டி குறைப்பு இருக்கலாம் என்று ஹெச்எஸ்பிசி தெரிவித்திருக்கிறது. சில்லறை பணவீக்கம் குறைந் திருப்பது, மொத்த விலை குறியீட்டு எண் குறைந்திருப்பது ஆகிய காரணங்களால் வட்டி குறைப்பு செய்யப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பருவமழை சராசரியை விட 10 சதவீதம் மட்டுமே குறைவாக இருக்கிறது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, மேலும் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதும் ஒரு சாதகம் என்று ஹெச்எஸ்பிசி அறிக்கை தெரிவிக்கிறது.
அதேசமயம் சில ரிஸ்க்குகள் இருக்கிறது என்பதையும் ஹெச்எஸ்பிசி மறுக்கவில்லை. ரூபாயின் மதிப்பு 2.3 சதவீதம் சரிந்திருக்கிறது. அமெரிக்க வட்டி உயர்த்தும் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தும் இந்தியாவில் வட்டி குறைப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.