கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மூடப்பட்டுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு, வங்கிக் கடன் வட்டியை 6 மாதங்களுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஓசூர் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் (ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஓசூர் ஹோஸ்டியா அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
''பிரதமர் அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களைப் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாகக் கூறியுள்ளார். சிறு தொழில் துறையைப் பொறுத்த அளவில் சுமார் ரூ.3 லட்சம் கோடி இத்துறைக்கு ஒதுக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும்.
இந்த ரூ.3 லட்சம் கோடியும் ஏற்கெனவே வங்கியில் கடன் வசதி உள்ளவர்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் லோன் தருவதாக அறிவித்துள்ளதும், ரூ.50 ஆயிரம் கோடி சிறு, குறு தொழில் புதிய விரிவாக்கத்துக்கு அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கது. இவற்றைத் தவிர்த்து சிறு, குறு தொழில் சார்ந்த பிரதான கோரிக்கைகள் என்னவென்றால் கடந்த 50 நாட்களாக எந்தவிதமான உற்பத்தியும் இன்றி ஒரு ரூபாய்கூட வருமானம் இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து சிறு, குறு தொழில்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் வங்கியில் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியைக் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது எங்களுடைய நீண்டகால கோரிக்கையாகும்.
அடுத்ததாக லட்சக்கணக்கான குறுந்தொழில்கள் வங்கியைச் சார்ந்திராமல் இயங்கி வருகின்றன. அவர்களுக்கு எப்படி உதவப்போகிறோம் என்றும் எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அந்த நிறுவனங்களை, அதில் பணியாற்றும் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு சிறப்புத் திட்டம் வகுக்கவேண்டும். நாடு மிகப்பெரிய அளவில் வேலை இழப்பை எதிர்நோக்கியுள்ளது. வேலை இழக்கும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு எந்தவிதமான திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
நிறுவனங்களில் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்யும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு தொழிலாளர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்கக் கொண்டால் வேலை இழப்பை தவிர்க்க முடியும். தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தும்போது ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள். அதனால் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் உதவித் திட்டங்கள் எல்லாமே அனைவருக்கும் சென்று சேருவதில்லை. அதனால் ஒரே மாதிரியான வழிகாட்டு முறைகளை நிதியமைச்சகம் உருவாக்கி அனைத்து வங்கிகளும் இந்த வழிகாட்டு முறைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பட்ட காலத்துக்குள் நிதியுதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்க வேண்டும்.
இந்த நிதியுதவிகள் அனைத்தும் எந்த விதமான விதிமுறைகளும் இன்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மத்திய நிதியமைச்சர் உடனடியாக நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி திட்டத்தின் பலன்கள் அனைவருக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.