வணிகம்

வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளியின் ஃபெராரி காரை இடித்துத் தள்ளிய ஊழியர்

ஐஏஎன்எஸ்

ட்ரக் ஓட்டுநர் ஒருவரை வேலையை விட்டு நீக்கியதால் அவர் தனது முதலாளியின் ஃபெராரி காரை இடித்துத் தள்ளிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

சிகாகோ நகரில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட டிரக் ஓட்டுநரை அந்த நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் தனது நிறுவன முதலாளியின் ஃபெராரி ஜிடிசி4 லூஸோ ஸ்போர்ட்ஸ் கார் மீது ட்ரக்கைக் கொண்டு வந்து மோதி இடித்துத் தள்ளியுள்ளார்.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள மோட்டார் ட்ரெண்ட் இணையதளம், "தனது வேலையைத் தக்க வைத்துக்கொள்ள அக்கறையுடன் முயன்றார் ஒருவர். ஆனால் முடியவில்லை. அந்த ட்ரக் நிறுவனமும் எந்த சச்சரவும் இன்றி அவருக்கு முழு சம்பளப் பாக்கியைக் கொடுத்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஃபெராரி முதலாளியின் காரா என்று அந்த ஓட்டுநர் கேட்டறிந்துள்ளார். ஆமாம் என்று உறுதி செய்த பின் 'என்னிடம் வைத்துக் கொண்டால் என்ன ஆகும் என்று இப்போது உங்களுக்குத் தெரியும்' என்று கூறிய ஓட்டுநர் ஃபெராரி காரின் மீது ட்ரக்கைக் கொண்டு வந்து மோதியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் சில சமூக வலைதளங்களில், அந்த ஓட்டுநர் குறிப்பிட்ட அளவு வேலை செய்து முடித்தால் அவருக்கு ஒரு புதிய ட்ரக் தருவதாக அந்த நிறுவனம் சொல்லியிருந்ததாகவும், ஆனால் அவரால் அந்த அளவு வேலையை முடிக்க முடியவில்லை என்றும், புதிய ட்ரக் கிடைக்காத காரணத்தால் தான் அவர் இப்படி செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT