மும்பையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தொடங்கியுள்ள பார்மா ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா கணிசமாக முதலீடு செய்துள்ளார்.
ஜெனரிக் ஆதார் என்ற பெயரிலான அந்த பார்மா நிறுவனத்தில் அவர் மேற்கொண்டது தனிப்பட்ட முதலீடாகும். ஆனால் அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்தார்,எவ்வளவு பங்குகளைப் பெற்றார்என்ற விவரம் வெளியிடப்படவில்லை. மும்பையைச் சேர்ந்த இளைஞர் அர்ஜுன் தேஷ் பாண்டே என்பவர் ஜெனரிக் ஆதார் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. மக்களுக்கு குறைந்த விலையில் அதிகளவில் மருந்துகளை அளிப்பதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கம்.
இந்நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் இருந்து மூலக்கூறு (ஜெனரிக்) மருந்துகளைப் பெற்று பார்மசிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யும். இதன் மூலம் 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை விலை குறையும்.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 கோடியாக உள்ளது. இது அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 150 கோடி முதல் ரூ.200 கோடியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிறுவனம் சர்க்கரை நோய் (நீரிழிவு), உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை அளிக்கிறது. விரைவிலேயேபுற்றுநோய்க்கான மருந்துகளையும் குறைந்த விலையில் விற்க முடிவு செய்துள்ளது.
ஓலா, பேடிஎம், ஸ்நாப்டீல், கியூர்பிட், அர்பன் லேடர் உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களிலும் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார்.