கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆட்டிப் படைப்பதால் சீனா மீதுபிற நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் பிற நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை சீனாவிடம் இருந்து இந்தியா கைப்பற்றிக் கொள்ள முடியும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியதால் உலகநாடுகள் பலவும் அதன் மீது வெறுப்பில் உள்ளன. பல நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளன. அப்படி சீனாவில்இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஜப்பான் தன் பக்கம் ஈர்ப்பதற்காக சில வர்த்தக சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜப்பானின் இந்த அறிவிப்பை தொடர்ந்தே மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். சீனாவில் இருந்து வெளியேறும் வாய்ப்புகளை இந்தியாவின் பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் என்றார். இந்தியாவில் தொழில் செய்ய முன்வரும் நிறுவனங்கள் வரவேற்கப்படும் என்றும், அவற்றுக்குத் தேவையான ஒப்புதல்கள், உரிமங்கள் விரைவில் கிடைக்க வழிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது கரோனா பேரழிவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து மத்திய அமைச்சகங்களும், ரிசர்வ் வங்கியும் திட்டமிட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.