சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சியும் பொருளாதார நிலைமையும் மந்தமாக இருக்கிறது. இதனால் சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை செயற்கையாக சரித்து ஏற்று மதியை ஊக்குவிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்தது. செவ்வாய்க்கிழமை 1.9 சதவீத மும், புதன்கிழமை 1 சதவீதம் அளவுக்கு சீனாவின் நாணய மதிப்பு சரிந்ததால், அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்தது. அமெரிக்கா டாலர் மதிப்பு உயரவே, சர்வதேச அளவில் முக்கிய கரன்ஸிகளின் மதிப்பு கடந்த இரு நாட்களாக சரிந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஒரு டாலர் 64.20 ரூபாய் என்ற அளவில் முடிந்தது. ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் 0.94 சதவீதம் சரிந்து ஒரு டாலர் 64.81 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் முடிந்தது. தற்போதைய ரூபாயின் மதிப்பு இதற்கு முன்பாக செப்டம்பர் 2013-ம் ஆண்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் உயர்வு
நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 64.95 ரூபாய் வரை அதிகபட்சமாக சரிந்தது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து ஆறு நாட்களாகவே சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
ஆகஸ்ட் 6-ம் தேதி ஒரு கிராம் (22 காரட்) 2,344 ரூபாயாக இருந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து உயர்ந்து இப்போது ஒரு கிராம் 2,447 ரூபாயாக இருக்கிறது.
கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை ரூபாயின் மதிப்பு 2.7 சதவீதம் சரிந்திருந்தாலும், மற்ற நாடுகளின் கரன்ஸிகளுடன் ஒப்பிடும் போது ரூபாய் சரிவு குறைவுதான். யுவான் சரிவு மேலும் தொடர வாய்ப்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர் சரிவில் பங்குச்சந்தை
யுவான் மதிப்பு குறைவு, ஜிஎஸ்டி அமலாவது தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்தன. சென்செக்ஸ் 354 புள்ளிகள் சரிந்து 27512 புள்ளியிலும், நிப்டி 113 புள்ளிகள் சரிந்து 8349 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 2 சதவீதத்துக்கு மேல் சரிந்து முடிந்தன.
ஐடி, ஹெல்த்கேர் மற்றும் கன்ஸ்யூமர் டியூரபில்ஸ் ஆகிய துறைகள் உயர்ந்து முடிந்தன. எப்எம்சிஜி, ஆட்டோ, மெட்டல், வங்கி, ரியால்டி, கேபிடல் குட்ஸ் உள்ளிட்ட துறைகள் சரிந்து முடிந்தன. ரியால்டி குறியீடு 5.4 சதவீதமும், மெட்டல் குறியீடு 4.37 சதவீதமும் சரிந்து முடிந்தன.
வேதாந்தா, ஹிண்டால்கோ, எஸ்பிஐ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந் தன.
யுவான் மதிப்பு சரிவது நிச்சயம் சவால்தான். ஆனால் இதிலிருந்து நாம் மீண்டு வர முடியும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற சவால்களை நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம். இதிலிருந்து நாம் நிச்சயம் மீண்டு வருவோம் என்றார்.