அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், நியூயார்க் நகரில் 16 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு 3000 சதுர அடி அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியுள்ளார். ஏற்கெனவே இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பக்கத்தில் அவருக்கு 80 மில்லியன் டாலர் மதிப்பிலான வீடு ஒன்று உள்ளது.
மூன்று படுக்கையறை, மூன்று குளியலறை கொண்ட இந்த புதிய வீட்டில், பெரிய அளவு ஜன்னல்கள், உயரமான கூரை, மார்பிள் சுவர்கள், கதிரியக்க இயந்திரத்தால் சூடாக்கும் வசதி கொண்ட தரைதளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த வீட்டின் கீழே இருக்கும் பகுதியை கடந்த வருடமே பெஸோஸ் வாங்கிவிட்டார். 1912-ம் ஆண்டைச் சேர்ந்த, மறுசீரமைப்பு செய்யப்பட்ட கட்டிடம் இது. மாடிஸன் சதுக்கப் பூங்காவுக்கு அருகில் இந்த கட்டிடமுள்ளது.
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜெஃப் பிஸோஸ் சமீபத்தில் தனது சொத்தில் 24 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்தார். ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள், அதிகமாக அமேசான் தளத்தைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம்.
பெஸோஸின் நிகழ் நேர மதிப்பு 138.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவருக்கு அடுத்த இடத்தில் பில் கேட்ஸ் 98 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் உள்ளார்.