வணிகம்

ஹெச்சிஎல் நிகரலாபம் 2.8 சதவீதம் சரிவு

செய்திப்பிரிவு

இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் னாலஜீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 2.8 சதவீதம் சரிந்து 1,783 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,834 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.

ஆனால் அதே சமயத்தில் வருமானம் 16.1 உயர்ந்து 9,777 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 8,424 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனம் ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை நிதி ஆண்டாக கொண்டு செயல்படுகிறது.

ஜூன் 30 வரையிலான காலத்தில் 1,06,107 பணியாளர்கள் நிறுவனத்தில் இருக்கிறார்கள். இந்த காலாண்டில் மட்டும் 9,448 நபர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். பணியாளர்களை பயன்படுத்தும் விகிதம் 83.5 சதவீதமாக இருக்கிறது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் 13.9 சதவீதம் உயர்ந்து 7,254 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 6,369 கோடி ரூபாயாக இருக்கிறது. வருமானம் 12.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் 32,917 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 37,061 கோடி ரூபாயாக இருக்கிறது.

நேற்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த நிறுவனப் பங்குகள் 6 சதவீதம் சரிந்து 937 ரூபாயில் முடிந்தது.

SCROLL FOR NEXT