என்னுடைய பதிவு அல்ல என்று வைரலான பதிவு தொடர்பாக ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய கருத்துகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையே பிரபலங்கள் பெயரில் போலிப் பதிவுகள், கருத்துகள் பரவி வருகின்றன.
இன்று (ஏப்ரல் 11) காலை முதலே ரத்தன் டாடா கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், கரோனாவால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதர்களுக்கான உந்துதல் மற்றும் உறுதியான முயற்சிகள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
2-ம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானுக்கு எதிர்காலம் இல்லை. இன்று அவர்களுடைய நிலை என சில உதாரணங்களைக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இறுதியாக, கரோனாவை வீழ்த்தி இந்தியப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலையை அடையும் என்று ரத்தன் டாடா புகைப்படத்துடன் அது இடம்பெற்றிருந்தது.
இதனை சமூக வலைதளத்தில் பல்வேறு பிரபலங்களும் பகிர்ந்து அருமையான கருத்து, அருமையான பதிவு என்று தெரிவிக்கத் தொடங்கினார்கள். இதனால், இந்தப் புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் அது தன்னுடைய பதிவு இல்லை என்று ரத்தன் டாடா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தப் பதிவு என்னால் சொல்லப்படவோ எழுதப்படவோ இல்லை. சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் வரும் விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய அதிகாரபூர்வ சேனல்களில் சொல்வேன். நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.