சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முருகப்பா குழும நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த ஒரங்கோ கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
நீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பத்தில் ஜப்பான் நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானதாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரங்கோ கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து முருகப்பா குழும நிறுவனங்களில் ஒன்றான பொல்யூடெக் லிமிடெட் நிறுவனம் நீர் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடும். இந்த கூட்டு நிறுவனத்தில் 49 சதவீத பங்குகள் ஜப்பான் நிறுவனம் வசம் இருக்கும். எஞ்சியுள்ள 51 சதவீத பங்குகள் முருகப்பா குழுமம் வசம் இருக்கும்.
பொல்யூடெக் நிறுவனம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பது மற்றும் அதற்கு தேவையான கருவிகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளுக்குத் தேவையான அனைத்து பணிகளையும் அதாவது ஆரம்பம் முதல் செயல்படுத்துவது வரையிலான பணிகளை இந்நிறுவனமே செய்து தரும்.
30 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் சர்க்கரை ஆலை, மருந்துப் பொருள் தயாரிப்பு ஆலை, உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு ஆலை, ஜவுளி ஆலை, மற்றும் ரசாயனத் தொழிற்சாலை களின் கழிவு நீரை சுத்திகரித்து அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.