கரோனா பாதிப்பு நமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத பொருளாதார மந்தநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்படும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபர்ட்டோ அஸிவெடோ எச்சரித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கரோனோ நோய் தொற்று மட்டுமின்றி இதனால் பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுவரை இல்லாத பொருளாதார மந்தநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்படும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபர்ட்டோ அஸிவெடோ எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தி வரும் மனிதப் பேரிழப்பும், பொருளதாரச் சீரழிவும் இதுவரை இல்லாத ஒன்று. நமது வாழ்நாளில் நாம் இதுபோன்ற இழப்பை காணவில்லை.
குறிப்பாக கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகள், ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினையாகும்.
வளர்ந்த நாடுகள், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், வர்த்தகம் செய்வோர், சுயதொழில் செய்வோர் பேரழிவைச் சந்திக்கிறார்கள்.
கரோனா பாதிப்பு நமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத பொருளாதார மந்தநிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.