வணிகம்

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,476 புள்ளி உயர்வு

செய்திப்பிரிவு

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் பெற்றன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் (பிஎஸ்இ) குறியீட்டெண் 2,476 புள்ளிகள் உயர்ந்து 30,067 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 702 புள்ளிகள் உயர்ந்ததில் 8,765 புள்ளிகளைத் தொட்டது.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் மீட்சி காணப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க ஏற்றம் காணப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதன் விளைவாக பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டதாகத் தெரிகிறது.

ஒரே நாளில் 2,500 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ. 8 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு ரூ.108 லட்சம் கோடியிலிருந்து ரூ.116 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இண்டஸ் இந்த் வங்கிப் பங்கு அதிகபட்சமாக 25 சதவீதம்உயர்ந்தது. இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யுனி லீவர், மஹிந்திரா அண்ட்மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் உயர்ந்தன.

பாரசிட்டமால் உள்ளிட்ட மலேரியா நோய் எதிர்ப்பு மருந்து ஏற்றுமதி மீதான தடையை மத்தியஅரசு பகுதியளவில் தளர்த்தியுள்ளதால் பார்மா நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாயின. ரெட்டீஸ் லேபரட்டரீஸ், டாரன்ட் பார்மா, கெடிலா, சன் பார்மா உள்ளிட்ட நிறுவன பங்குகள் 15 சதவீதம் வரை உயர்ந்து விற்பனையானது.

ரூபாய் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் உயர்ந்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் ரூ.75.63 என்ற விலையில் வர்த்தகமானது. நேற்று முன்தினம் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.76.13 என்ற நிலையில் இருந்தது. ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT