வணிகம்

செபி இயக்குநர் குழுவில் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்

பிடிஐ

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் இயக்கு நர் குழுவில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் சகோதரர் அருண் சாத்தே இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது நியமனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான (இவர் வழக்கறிஞரும் கூட) இவர் 1989-ம் ஆண்டு பாஜக சார்பில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டவர். இப்போது பகுதி நேர உறுப்பினராக செபியின் இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் அரசியல் நியமனங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் சூழ்நிலையில் இவரை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. செபியின் தற்போதைய தலைவர் யூ.கே. சின்ஹாவின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர இருக்கும் சூழ்நிலையில் இவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.

செபி சட்டத்தின் படி இயக்குநர் குழுவில் மத்திய அரசு ஐந்து நபர்களை நியமிக்க முடியும். இதில் மூவர் முழு நேர இயக்குநர் ஆவார்கள். இது தவிர செபி தலைவர், மூன்று நியமன உறுப்பினர்கள். ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு இயக்குநர் இருப்பார்கள்.

இம்மாத இறுதியில் செபியின் இயக்குநர் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் அருண் சாத்தே, சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

பிப்ரவரி 2016-ம் ஆண்டு தற்போதைய தலைவர் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அந்த சமயத்தில் அரசாங்கம் மேலும் ஒருவரை நியமிக்கலாம். அதே சமயத்தில் சின்ஹாவுக்கு மேலும் ஒருவருடம் வரை பதவி நீட்டிப்பு வழங்கவும் வழி இருக்கிறது.

அருண் சாத்தே தகுதியான நபராக இருந்தாலும், அவரது அரசியல் ரீதியான தொடர்புகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

நியமனம் சரியே: நிதி அமைச்சகம்

அருண் சாத்தேயின் நியமனம் சரியே என்று நிதிமைச்சகம் தெரிவித்திருக்கிறது. செபியின் பகுதி நேர உறுப்பினர் பதவிக்கு அவர் தகுதியான நபர்தான். இவரது நியமனத்தில் சர்ச்சை எழ காரணமே இல்லை. அவரை பற்றி விசாரித்த பிறகே நியமனம் செய்யப்பட்டார் என்று நிதித்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி தெரிவித்தார்

என்ன தவறு?

நான் ஆர்.எஸ்.எஸ்.காரணாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று அருண் சாத்தே கேள்வி எழுப்பி இருக்கிறார். பாஜகவின் தேசிய செயல் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். நான் ஆர்.எஸ்.எஸ்.காரண்தான் இதில் என்ன தவறு. விதிமுறைகளுக்கு ஏற்ப நான் பணி செய்யப்போகிறேன்.

நான் செபியில் வேலை செய்யவில்லை. நிதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறேன். செபியின் சட்டங்களுக்கு ஏற்ப பணியாற்றப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT