நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக வெளியான தகவல் குறித்து ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி பிறப்பித்தார். மக்கள் அனைவரும் தங்களின் குடும்ப நலனுக்காக, வீட்டை விட்டு வெளிேயறாமல் இருக்க வேண்டும், ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு அளிக்கவும் கோரினார்.
இதையடுத்து, பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை அனைத்துப் பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்தது. பெருநகரங்கள் அனைத்திலும் புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டன.
முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் ரயில்வே அறிவித்தது.
ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ரயில்வே முன்பதிவு தொடங்கியுள்ளதாக வெளியான தகவல் குறித்து ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளதாவது:
ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக சில ஊடங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி விளக்கம் அளிக்கிறோம். ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு பயணம் செய்யும் நாட்களுக்கான முன்பதிவை எப்போதுமே ரத்து செய்யவில்லை.
ஊரடங்கு காலத்தில் ரயில்கள் இயக்கப்படாது என்பதால் அதற்கான காலத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியாது. 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் ஊரடங்கிற்கு பிந்தைய நாட்களுக்கான முன்பதிவு எப்போதுமே செய்யப்படுகிறது.இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.