வணிகம்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க ரொனால்டோ உதவி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு உதவும் விதமாக போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது மேலாளர் ஜார்ஜ் மென்டிஸ் ஆகியோர் கூட்டாக 10 இருக்கைகள் கொண்ட இரு தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்க நிதி உதவி வழங்க உள்ளனர்.

35 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மேலாளரான ஜார்ஜ் மென்டிஸுடன் இணைந்து கரோனா வைரஸ் தொற்று சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே போர்ச்சுகலின் போர்டா நகரில் உள்ள சாவோ ஜாவோ மருத்துவ நிறுவனத்துக்கு 2 லட்சம் கவுன்கள், 3 உயிர்காக்கும் கருவிகள், 1000முகக் கவசங்கள் வழங்கியிருந் தனர்.

இந்நிலையில் ரொனால் டோவும், மென்டிஸும் தற்போது வடக்கு லிஸ்பன் நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை மையத்தில் இரு தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்க நிதி வழங்க உள்ளனர். இதன் மூலம் 20 படுக்கை வசதிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. இங்கு கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 31 இருக்கைகள் உள்ளன. தற்போது இதன் எண்ணிக்கை 51 ஆக உயர உள்ளது.

இந்த இரு தீவிர சிகிச்சை பிரிவுமையங்களுக்கும் ரொனால்டோ மற்றும் மென்டிஸ் பெயர்வைக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று சான்டா அந்தோனியா மருத்துவமனையில் முழுமையான வசதிகளை கொண்ட 15 படுக்கைகளை அமைக்கவும் ரொனால்டோ, மென்டிஸ் ஆகியோர் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

போர்ச்சுகல் நாட்டில் கரோனாவைரஸ் தாக்குதலுக்கு 30 பேர்உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 2,362 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மெஸ்ஸியும் உதவி...

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் பார்சிலோனா கிளப்பின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி ரூ.8.24 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் நாட்டில் 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபா, 28 சர்வதேச கால்பந்து வீரர்களை வைத்து 13 மொழிகளில் வீடியோ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, ஜெர்மனி அணி வீரர் பிலிப் லாம், ஸ்பெயின் வீரர் இக்கர் காஸிலஸ், கார்லே பை, மெஸ்ஸி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT