வணிகம்

கடும் சரிவுக்குப் பின் பங்குச் சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

தொடர்ந்து கடுமையான சரிவைக் கண்டு வந்த பங்குச் சந்தையில், நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து நேற்று 7 சதவீதம் அளவில் ஏற்றம் காணப்பட்டது.

கரோனோ வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிற நிலையில், அபாய சூழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரமதர் நரேந்திர மோடி, 21 நாட்கள் ஊரடங்கை நேற்று முன் தினம் பிறப்பித்தார். கரோனா சிகிச்சைக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.15,000 கோடி அளவில் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அதைத் தொடர்ந்தே நேற்றைய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் 1,861.75 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 28,535.78-ஆக உயர்ந்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தையில் 516.80 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 8,317.85-ஆக உயர்ந்தது. மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையில் 7 சதவீதம் அளவிலும், தேசியப் பங்குச் சந்தையில் 6.62 சதவீதம் அளவிலும் ஏற்றம் காணப்பட்டது.

தற்போது கொண்டுவரப்பட்டி ருக்கும் 21 நாட்கள் ஊரடங்கு முதலீட்டாளர்களைக் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தற்போதையச் சூழலில் இந்த ஊரடங்கு தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும் பொருளாதாரப் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்றைய வர்த்த முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 13.84 சதவீதம் அளவில் ஏற்றம் கண்டது. ஹெச்டிஎஃப்சி வங்கி 12.41 சதவீதமும், கோடக் மஹிந்திரா வங்கி 11.9 சதவீதமும், யுபிஎல் 11.43 சதவீதமும், கிராசிம் 10.47 சதவீதமும் ஏற்றம் கண்டன.

அதேசமயம் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 15.86 சதவீதம் அளவில் வீழ்ச்சி கண்டது. இண்டஸ்இந்த் வங்கி 3.54 சதவீதமும், கோல்இந்தியா 2.82 சதவீதமும் வீழ்ச்சிகண்டன. தற்போதைய அசாதாரணசூழல் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று முன்தினம் ரூ.2,153 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

ஜவுளித்துறைக்கு அரசு உதவி

தற்போதைய சூழலில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கடும் முடக்கத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஜவுளி நிறுவனங்கள் தற்போதைய சூழலை மனதில் கொண்டு எந்த சரக்குகளையும் ரத்து செய்ய வேண்டாம். அரசு உங்களோடு இருக்கிறது. தேவையான உதவி கள் திட்டமிடப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT