உள்நாட்டு மொபைல் போன்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.41,000 கோடி அளவில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிலையங்களுக்கென ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்புகளில், இந்தியாவை முக்கிய சந்தையாக மாற்றும் பொருட்டு மத்திய அரசு இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
‘‘எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொடர்பாக முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் முக்கியகேந்திரமாக மாற்ற திட்டமிடப் பட்டுள்ளது. அந்தவகையில் மொபைல் போன்கள், சில குறிப்பிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சார்ந்த தயாரிப்பு மற்றும் அதுதொடர்பான செயல்பாடுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.40,995 கோடி ஒதுக்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி செலவிடப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மொபைல் தயாரிப்பு துறை மூலம் 2025-ல் ரூ.10 லட்சம் கோடி வருவாய் உருவாகும்’’ என்று அவர் தெரி வித்தார்.