வணிகம்

கரோனா வைரஸால் வருமானம் இழந்து திணறும் 20 கோடி பேருக்கு ரூ.5,000 உதவித் தொகை: மத்திய அரசிடம் இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் மிகத்தீவிரமடைந்துள்ளதால் இந்திய தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. அன்றாட ஊதியம் பெரும் தொழிலாளர்கள் வேலையின்மையால் வருமானம் இன்றி திணறிவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு கீழே இருக்கும் இளைஞர்களுக்கு ரூ.5,000 அளவிலும், 60 வயது மேற்பட்டவர்களுக்கு ரூ.10,000 அளவிலும் உதவித்தொகை நேரடியாக அவர்களுடைய கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்று இந்தியதொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

மக்களின் நுகர்வுத் தேவையை அதிகரிக்கும் விதமாக இந்த உதவி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தில் சமர்பித்த குறிப்பில் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொழில் துறை மற்றும் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த விவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளது.

கரோனா வைரஸால் வர்த்தகம் முடங்கும். விளைவாக பொருளாதார வளர்ச்சி தடைபடும். இதை எதிர்கொள்ளும் விதமாக நிதிக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். நாட்டின் ஜிடிபி-யில்1 சதவீதத்தை, அதாவது ரூ.2 லட்சம் கோடியை வருமான இழப்பைச் சந்தித்தவர்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் அரசு தனது சேமிப்பை அதிகரிக்க முடியும். அந்த சேமிப்பு தொகையை இத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று சிஐஐ தெரிவித்துள்ளது.

ரூ.2 லட்சம் கோடியை ரூ.10,000என்று பகிர்ந்தளித்தால் 20 கோடி பேருக்கும், ரூ.5,000 என்று பகிர்ந்தளித்தால் 40 கோடி பேருக்கும் வழங்க முடியும் என்று தெரிவித்தது.

இந்தியாவில் மொத்தம் 20 கோடி பேர் சாதாராண தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள்தான் அதிக பாதிப்பைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிஐஐ கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கும், தினக் கூலி பெறுபவர்களுக்கும் ஒரு மாதம் ரேஷன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பங்குச் சந்தையை மீட்டெடுக்கும் வகையில் வரி தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான 10 சதவீத வரியை முழுதாக நீக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். இதனால் அந்நிறுவனங்களின் நிதி நெருக்கடி குறைந்து, பணப்புழக்கம் இருக்கும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

விமானத் துறை, விடுதிகள், சிறு குறு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்துறைகளை மீட்டெடுக்கும் வகையில் வரித் தள்ளுபடி உள்ளிட்ட பொருளாதார சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

அதேபோல் ரிசர்வ் வங்கி தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் வகையில் நிதிக் கொள்கைகளை வகுக்க வேண்டும். ரெப்போவிகிதம் 50 புள்ளிகள் அளவில் குறைக்கப்பட வேண்டும். அதேபோல் வாராக் கடனுக்கான வரையறை மாற்ற வேண்டும். அதன் வரம்பான 90 நாட்களை 180 நாட்களாக உயர்த்த வேண்டும்.

SCROLL FOR NEXT