வணிகம்

பங்குச்சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பு

செய்திப்பிரிவு

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. கரோனாவைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த தடையால் பெருமளவு தொழில் தேக்கமடைந்து பொருளாதார பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதன் எதிரொலியால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் பிற்பகல் நிலவரப்படி 1600 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது.

சென்செக்ஸ் 28915 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 516 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 8450 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT