வணிகம்

யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்: மாலை முதல் முழுஅளவில் செயல்படும்

செய்திப்பிரிவு

யெஸ் வங்கி இன்று மாலை 6 மணி முதல் முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஏப்ரல்-3 வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000-க்குமேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.

வங்கியின் இயக்குநர்கள் குழுவை கலைத்துவிட்டு, எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை தனது பிரதிநிதியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.

யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடு வரும் மார்ச் 18-ம் தேதி விலக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படவுள்ளது.

ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் இன்று மாலை முதல் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவை உட்பட யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT