வணிகம்

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அளவு ஏற்க முடியாதது: அருண் ஜேட்லி

பிடிஐ

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அளவுகள் ஏற்க முடியாத மட்டத்துக்குச் சென்று விட்டன என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்தியன் வங்கி நிறுவிய நாளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் ஜேட்லி கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “செயலற்ற சொத்துக்கள், அதாவது வராக்கடன் அளவு பொதுத்துறை வங்கிகளில் தற்போதைய நிலரவங்களின் படி ஏற்க முடியாத அளவுக்குச் சென்றுள்ளது. இதற்கு அஜாக்கிரதை, செயலற்ற தன்மை ஆகியவை பகுதி காரணங்களாக இருப்பதோடு, சில தொழிற்துறைகள் சந்தித்து வரும் சவால்களும் பகுதியளவு காரணமாக அமைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் செயலற்று முடங்கிக் கிடக்கும் சொத்துக்களின் நிலவரமே இதனை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

கடந்த நிதியாண்டு மார்ச் 31-ல் முடிவடைந்ததோடு வங்கிகளின் வராக்கடன் 2.67 லட்சம் கோடியாக இருந்தது, வங்கிகள் இந்தச் சவால்களுக்கு ஏற்ப அடுத்த சில காலாண்டுகளில் செயல்படும் என்று நம்புகிறேன், வராக்கடன் அளவைக் குறைக்க அனைத்து விதமான முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

வங்கி நிர்வாக மட்டத்தில் இதற்கு தீர்வு காணப்படுவதோடு, அரசு தரப்பிலிருந்தும் கூடுதல் முதலீடு தீர்வும் சாத்தியமே. மேலும் பலவீனமான தொழிற்துறைகளின் சவால்களை குறைக்கவும் முழு திட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அடுத்த சில காலாண்டுகளில் இந்த நிலைமைகளைச் சீர்செய்வதில் வங்கிகள் சவால்களுக்கேற்ப செயல்படும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் ஜேட்லி.

உலக முகமை மூடீ கணக்குகளின் படி நடப்பு நிதியாண்டில் இந்திய வங்கிகள் வராக்கடன் தாக்கங்களில் சவால்களை சந்திக்கும், ஆனால் ஒருவேளை புதிய வராக்கடன்கள் குறையலாம்.

ஆனால், மொத்த வராக்கடன் அளவு அடுத்த மாதத்தில் 4.8% அதிகரிக்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த அரசு முதலீடு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படும் மூலதனம் ரூ.1.80 லட்சம் கோடியில் அரசு ரூ.70,000 கோடி பங்களிப்பு செய்யவுள்ளது. இது 4 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘நாட்டு பொருளாதாரத்தின் வாழ்வாதாரமான பொதுத்துறை வங்கிகளில்’ சிறந்த திறமை படைத்தவர்களை பணியில் சேர்ப்பதற்கான புதிய அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு, பொதுத்துறை வங்கிகளின் செயல் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் ஜேட்லி உறுதி அளித்தார்.

வங்கி நிர்வாகங்கள் தொழில்நேர்த்தி மிக்கதாக மாற்றப்படவுள்ளது. இதற்காக மிகவும் கண்டிப்பான பணி நியமன முறைகளை கடைபிடிக்கப் போகிறது மத்திய அரசு என்பதை சுட்டிக் காட்டிய ஜேட்லி, ஸ்டீல், மின்சாரம், டிஸ்காம், நெடுஞ்சலைத்துறைகளின் சவால்களும் வங்கிகளின் வராக்கடன் அதிகரிப்பு விகிதத்தில் பங்களிப்பு செய்துள்ளதாக சுட்டிக் காட்டினார்.

“இதற்கான காரணம் பகுதியளவு உள்நாட்டு நிலைமைகளும் பகுதியளவு புறக்காரணிகளும் உள்ளன. இப்போது இந்த ஒவ்வொரு துறையும் ஒவ்வொன்றாக கவனிக்கப்படும்” என்றார் ஜேட்லி.

வங்கிகளின் வலைப்பின்னல் பெரிய அளவில் விரிவடைந்து கொண்டு வருகிறது. பொருளாதாரத்தின் சவால்களில் வங்கிகளின் ஆரோக்கியமும் பிரதிபலிக்கிறது. ஒருபுறம் வலைப்பின்னல் விரிவாக்கம் அடைகிறது என்பதில் நாம் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னும் நிறைய பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது.

பிரதமரின் ஜன் தன் திட்டம் பெரிய அளவில் வெற்றி பெற பொதுத்துறை வங்கிகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது, திட்டம் தொடங்கிய போது சில கணக்குகளிலேயே பணம் இருந்தது, ஆனால் தற்போது எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது. தற்போது 56% கணக்குகளில் பணம் உள்ளது. நிதிசேவைகள் துறை என்னிடம் கூறியதை வைத்துப் பார்க்கும் போது, தற்போதைய எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது” என்றார் அருண் ஜேட்லி.

SCROLL FOR NEXT