வணிகம்

முட்டை விலை மேலும் சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?

செய்திப்பிரிவு

நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 33 காசுகள் குறைந்து ரூ.2.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 85 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 17 பேர் வெளிநாட்டவர்கள். கரோனா வைரஸால் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அசைவ உணவகளை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதுபோலவே கேரளாவில் சில மாவட்டங்களில் பறவைக்காய்ச்சலும் பரவி வருகிறது. இதனாலும் கோழிக்கறி மற்றும் முட்டை நுகர்வு குறைந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை ஒரு மாதத்தில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

முட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அடுத்தடுத்து விலை குறைந்து வருகிறது. இதுமட்டுமின்றி பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மதிய உணவுக்காக வாங்கப்படும் முட்டையின் அளவும் குறைந்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

நாமக்கல் முட்டை இன்று பண்ணைக் கொள்முதல் விலை 33 காசுகள் குறைந்து ரூ.2.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT