சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வரி மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திண்டாடி வரும் நிலையில், இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட பெரிதும் துணை புரியும்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, பேரல் ஒன்று 36 டாலராகச் சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி கடந்த 2004-ம் ஆண்டுக்கு இணையாக வந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8 வரை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், விலையைக் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பாகக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது.
டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.69.87க்கும், டீசல் ரூ.62.58க்கும் விற்கப்படுகிறது.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்போது கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17.98, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.13.83 என உள்ளது.