மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் கடந்தமூன்று ஆண்டுகளில் ரூ.1.34 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவைக்கு அவர் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘2017 ஏப்ரல் முதல் 2020 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மரபுசாராஎரிசக்தி திட்டங்களில் ரூ.1.34 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான திட்டங்களை தனியார் நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன. வெளிப்படையான ஏல முறையிலேஅவர்கள் இத்திட்டங்களில் செயலாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்.
2022-க்குள் 175 ஜிகா வாட்ஸ் அளவில் மரபுசாரா எரிசக்தியை உருவாக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 100 ஜிகா வாட்ஸ் சோலார் எனர்ஜி மூலம், 60 ஜிகா வாட்ஸ் காற்றாலை மூலம்உருவாக்கப்பட உள்ளது. இத்துறையில் வெளி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 8,004 மெகாவாட்ஸ் அளவில் மரபுசாரா எரிசக்திக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சென்ற நிதி ஆண்டில் 5,980 மெகா வாட்ஸ் அளவில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
கனிம சட்ட திருத்த மசோதா
நிலக்கரி உற்பத்தி தொடர்பாகஉருவாக்கப்பட்ட கனிம சட்டதிருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இனி நிலக்கரி உற்பத்தி தொடர்பான ஏலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து வகையான நிறுவனங்களும் பங்கேற்க முடியும். இந்த திருத்த மசோதா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 83 மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தமசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 12 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாதன் ஜோஷி கூறுகையில், ‘இந்த சட்டத் திருத்தமசோதாவல் நிலக்கரித் துறையில் அந்நிய முதலீடு உயரும். இதன் விளைவாக நிலக்கரி இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.
எஃகு மற்றும் எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே நிலக்கரி சுரங்கத்துக்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிற நிறுவனங்கள் நிலக்கரி ஏலத்தில் பங்குபெறும் வகையில் இந்தப்புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், நிலக்கரி சுரங்கத் துறையில்போட்டி அதிகரித்து உற்பத்தி பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவால் நடவடிக்கை மசோதா
திவால் நடவடிக்கை இரண்டாம் திருத்த மசோதா நேற்றுமாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களை வாங்கும் வெளி நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அது கடந்த வாரம்மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில் தற் போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், ஏன் மத்திய அரசு ஒவ்வொரு சட்டத்திலும் தொடர்ந்து திருத்தங்கள் கொண்டுவருகிறது என்று கேட்கப்பட்டபோது, ‘தற்போதையை சூழலுக்கு ஏற்ப மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மிகுந்த திட்டமிடலுடனே முடிவுகள் எடுக்கப்படுகின்றன’ என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
துறைமுகங்களுக்கு அதிகாரம்
அரசின் 12 முக்கியத் துறைமுகங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் வகையில் முக்கிய துறைமுகங்களின் அதிகாரம் தொடர்பான மசோதா நேற்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதாவின் நோக்கம் அரசு துறை முகங்களை தனியாருக்கு விற்பது அல்ல. மாறாக,சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் உரிமையை அத்துறைமுகங்களுக்கு வழங்குவதற்காவே, இந்தமசோதா உருவாக்கப்பட்டு இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்த மாசோதா தெளிவற்று இருப்பதாகவும், குழப்பங்களை நீக்கும் வகையில் புதிய வரைவு உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்தரப்பில் கூறப்பட்டது. 2022-க்குள் 175 ஜிகா வாட்ஸ் அளவில் மரபுசாரா எரிசக்தியை உருவாக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.