வணிகம்

ரீஃபண்ட் தொகையை விரைவாக அனுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு: 3 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது இன்ஃபோசிஸ்

செய்திப்பிரிவு

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் முன்னணியில் திகழும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது பணியாளர்கள் 3 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. வருமானவரித் துறையின் மத்திய பிராசஸிங் மையத்தில் (சிபிசி) பணிபுரியும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் இவர்கள். வருமான வரிசெலுத்துவோருக்கு ரீஃபண்ட் தொகையை விரைவாக அனுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முழு விவரத்தையும் நிறுவனம் நன்கு அலசி ஆராய்ந்து, நிறுவன விதிகளை மீறிய மூவரையும் பதவி நீக்கம் செய்வதாக இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது. தனியார் நிறுவனமான இன்ஃபோசிஸில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

இன்ஃபோசிஸ் நிறுவனம் வகுத்தளித்த கொள்கைகளில் உறுதியாக இருப்பதாகவும், நிறுவன விதிமுறைகளை உறுதியுடன் கடைப்பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளது. விதிகளை மீறும் பணியாளர்கள் மீதுபாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

4 சதவீதம் லஞ்சம்

சிபிசி மையத்தில் பணி புரியும் இன்ஃபோசிஸ் பணியாளர், தனது நண்பர்கள் உதவியோடு அதிக வரி செலுத்துவோர் சிலரிடம் ரீஃபண்ட் நடவடிக்கையை விரைவுபடுத்த லஞ்சம் பெற்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். இவ்விதம் ரீஃபண்ட் அளிக்க வரும் தொகையில் 4 சதவீதம் லஞ்சமாகத் தரவேண்டும் என்று சிலரிடம் செல்போன் மூலம் கேட்டுள்ளனர். இது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை ஒருவர் வருமான வரித் துறையினரிடம் அளித்தார்.

வருமான வரித் துறையினர் காவல்துறையிடம் அதை அளித்து விசாரித்ததில் இன்ஃபோசிஸ் பணியாளர்இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் 3 பேர் ஈடுபட்டிருந்ததும், இவர்கள் ரூ.15 லட்சம் வரை இவ்விதம் வசூலித்திருக்கலாம் என்றும் எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT